தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி.. சென்செக்ஸ் 509 புள்ளிகள் சரிவு..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 509 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு கண்டது, கடந்த ஜூன் சில்லரை விலை பணவீக்கம் மற்றும் கடந்த மே மாத தொழில்துறை உற்பத்தி முடிவுகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருந்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், என்.டி.பி.சி. மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 3 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

கோடீஸ்வரர்கள் நிறைந்த இன்போசிஸ் நிறுவனம்… கோடீஸ்வர பணியாளர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்தது

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,482 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,815 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 170 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.251.78 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.47 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 508.62 புள்ளிகள் குறைந்து 53,886.61 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 157.70 புள்ளிகள் சரிவு கண்டு 16,058.30 புள்ளிகளில் முடிவுற்றது.