இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

நிறுவனங்களின் கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். 

எச்.சி.எல். டெக்னாலஜிஸ், எச்.டி.எப்.சி. வங்கி, ஏ.சி.சி., எல் அண்ட் டி இன்போடெக், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், டாடா ஸ்டீல் லாங் புரோடக்ட்ஸ், டென் நெட்வொர்க்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்பட சுமார் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. கடந்த ஜூன் மாத சில்லரை விலை பணவீக்கம், கடந்த மே மாத தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள் நாளை வெளியாகிறது. கடந்த ஜூன் மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் வரும் வியாழக்கிழமை வெளிவருகிறது.

எல் அண்ட் டி இன்போடெக் நிகர லாபம் ரூ.497 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.10 சிறப்பு டிவிடெண்ட் அறிவிப்பு

அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். அமெரிக்காவின் கடந்த ஜூன் மாத பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் வரும் புதன்கிழமை வெளியாகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் இந்த புள்ளிவிவரத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். மேலும், சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. 

பணவீக்கம்

இதுதவிர, பருவமழை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.