வர்த்தக துளிகள்.. பயணிகள் வாகனங்கள் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்..

 
டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து மாடல் பயணிகள் வாகனங்களின் விலையை 0.55 சதவீதம் உயர்த்தியுள்ளது. மூலதன செலவினம் அதிகரிப்பால் பயணிகள் வாகனங்கள் விலையை உயர்த்தியுள்ளதாகவும், இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் தனது வர்த்தக வாகனங்கள் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

கவுதம் அதானி

இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள 5ஜி அலைகற்றை ஏலத்தில் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை அதானி குழுமம் உறுதி செய்துள்ளது. அதேசமயம், விமான நிலையம், துறைமுகங்கள் மற்றும் தளவாடங்கள், மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் பல்வேறு உற்பத்தி செயல்பாடுகளில் மேம்பட்ட இணைய பாதுகாப்புடன் தனியார் இணைய சேவைகளை வழங்குவதற்காக மட்டுமே அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்கிறோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சக்திகந்த தாஸ்

2022-23ம் நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் (அக்டோபர்-மார்ச்) பணவீக்கம் படிப்படியாக குறையும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) மீட்சியின் பின்னடைவுக்கான பல உயர் அதிர்வெண் குறிகாட்டிகளுடன் சப்ளை அவுட்லுக் சாதகமாக தோன்றுவதால் இது (பணவீக்கம் குறையும் என்பது) எங்களது தற்போதைய மதிப்பீடு என்று சக்திகந்த தாஸ் தெரிவித்தார்.

அன்னிய முதலீடு

அமெரிக்காவில் தொடர்ந்து வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருவது மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவதற்கு மத்தியில், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனர். இந்த மாதத்தில் இதுவரை மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.