வர்த்தக துளிகள்.. நமக்கு கண்ணியமான வேலைகள் தேவை- ரகுராம் ராஜன்

 
இந்திய பொருளாதாரம் எதனால் முடங்கியது? ரகுராம் ராஜன் விளக்கம்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேட்டி ஒன்றில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. இருப்பினும், நாட்டின் பெரிய மக்கள் தொகை காரணமாக இன்னும் அதிக வளர்ச்சி தேவை. வேலைகள் என்பது பொருளாதாரத்திற்கான ஒரு பணியாகும். எல்லோரும் ஒரு சாப்ட்வேர் புரோகிராமர் அல்லது  ஆலோசகராக இருக்க வேண்டும் என்று நமக்கு தேவையில்லை. ஆனால் நமக்கு கண்ணியமான வேலைகள் தேவை என தெரிவித்தார்.

எம்.ஆர்.பி.எல். பெட்ரோல் பம்ப்

ஓ.என்.ஜி.சி.யின் துணை நிறுவனமான மங்களூர் ரிபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெட்ரோல் பம்புகளின் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த விரும்புகிறது. மங்களூர் ரிபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட்  தற்போது கர்நாடகா மற்றும் கேரளாவில் பெட்ரோல் பம்புகளை அதிகளவில் செயல்படுத்தி வருகிறது.

அரிசி

சர்வதேச அளவில் இந்தியா மிகப் பெரிய  அரிசி ஏற்றுமதியாளராக உள்ளது. இந்த ஆண்டு நம் நாட்டில் சில பகுதிகளில் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. இதனால் அரிசி உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக உலகளாவிய உணவு விநியோகத்திற்கான அடுத்த சவாலாக அரிசி உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதானி என்டர்பிரைசஸ்

அதானி குழுமத்தை சேர்ந்த அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு நேற்று ரூ.3 லட்சம் கோடியை தாண்டியது. அதானி குழும நிறுவனங்களில் பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் ரூ.3 லட்சம் கோடியை நான்காவது நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ்.  நேற்று மும்பை பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.07 சதவீதம் உயர்ந்து ரூ.2,711.55ஆக இருந்தது.