வர்த்தக துளிகள்.. இந்திய சாலைகளில் செல்லும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 5 கோடியை எட்டும்

 
மின்சார வாகனங்களுக்கான ரீசார்ஜ் மையம்

2030ம் ஆண்டுக்குள் இந்திய சாலைகளில் செல்லும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 5 கோடியை தொடும். தேவை, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை முன்னணி ஆகியவற்றில் சாதகமான காரணிகளால் இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மின்சார வாகனங்கள் அதிகரிப்பு சார்ஜிங் நிறுவனங்களுக்கு மகத்தான (வருவாய்) வாய்ப்பை அளிக்கிறது என ஆலோசனை நிறுவனமான கே.பி.எம்.ஜி. தெரிவித்துள்ளது.

நிலக்கரி விற்று ரூ.4,586 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா.. பங்கு ஒன்றுக்கு ரூ.3.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

கோல் இந்தியா நிறுவனத்தின் 48வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அந்நிறுவனத்தின் தலைவர்  பிரமோத் அகர்வால் பேசுகையில்,  சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை அதிகமாக இருக்கும் நேரத்தில், கடந்த 4 ஆண்டுகளாக விலையை உயர்த்தாமல்,  தனது நிலக்கரியை இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிக போட்டி விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது என தெரிவித்தார். நாட்டின் நிலக்கரி தேவையில் 80 சதவீதத்தை கோல் இந்தியா நிறுவனம் பூர்த்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடி வரி வசூல்

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும். இந்த நிதியாண்டில் இதுவரையிலான காலத்தில் நிகர நேரடி வரி வசூல் ரூ.4.80 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும் 33 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா தெரிவித்தார்.

அரிசி

 உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு கையிருப்பு இருப்பதால், அரிசி ஏற்றுமதிக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.  அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பது குறித்து சில விவாதங்கள் நடந்தன ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அரசாங்கம் எந்த இடத்திலும் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பில்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.