இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்  என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வரிசையாக வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், வேதாந்தா, இண்டஸ்இந்த் வங்கி, மாருதி சுசுகி இந்தியா மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட சுமார் 160க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது 2022 மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் உலகம் முழுவதும் பெரிதும் கவனிக்கப்படுகிறது. 

பஜாஜ்  பைனான்ஸ்

அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.18,400 கோடிக்கும் அதிகமாக பங்குகளை நிகர விற்பனை செய்துள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.14,400 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். இதனால் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு முக்கியமானதாக இருக்கும். வரும் வியாழன் மாதததின் கடைசி வியாழன் என்பதால் அன்றைய தினம் பங்கு முன்பேர கணக்கு முடிக்கப்படும். ஆகையால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.

கச்சா எண்ணெய்

அமெரிக்க பெடரல் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற தகவல், அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை இந்த வாரம் வெளியிடுகின்றன. இதுதவிர சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள்,  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு  உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.