தொடர்ந்து 3வது நாளாக அடி வாங்கிய பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ் 1,093 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,093 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகித உயர்வு நடவடிக்கை மேலும் தீவிரமாக மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் பலத்த சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் பேங்க் பங்கினை தவிர்த்து மற்ற 29 நிறுவன பங்குகளின் விலையும் குறைந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 972 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,532 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 106 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.279.68 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.6.19 லட்சம் கோடி  கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,093.22 புள்ளிகள் குறைந்து 58,840.79 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 346.55 புள்ளிகள் சரிவு கண்டு 17,530.85 புள்ளிகளில் முடிவுற்றது.