பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு.. சென்செக்ஸ் 413 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 413 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை பிட்ச் நிறுவனம் குறைத்தது, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருத்தி பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி மற்றும் பவர்கிரிட் உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டெக் மகிந்திரா மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,698 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,796 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 125 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.285.87 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5 ஆயிரம் கோடி  கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 412.96 புள்ளிகள் குறைந்து 59,934.01 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 126.35 புள்ளிகள் சரிவு கண்டு 17,877.40 புள்ளிகளில் முடிவுற்றது.