வர்த்தக துளிகள்.. சட்டப்படி ரூபாய் நோட்டுகளை வெளியிடும் உரிமை யாருக்கு உள்ளது?..

 
பணம்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) சட்டத்தின் 22வது பிரிவின்படி, இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை வெளியிடுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கிக்கு  முழு உரிமை உண்டு.  எவ்வாறாயினும், பிரிவு 25ன் படி வங்கி  நோட்டுகளின் வடிவமைப்பு, வடிவம் மற்றும் பொருள் ஆகியவை ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் பரிந்துரைகளை பரிசீலித்த பிறகு மத்திய அரசால் அங்கீகரிக்கப்படும்.

மி பே

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, 2019ம் ஆண்டில் நம் நாட்டில் மி பே-யை அறிமுகப்படுத்தியது. இது நம் நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான பயனர்களை பெற்றது, பின்னர் மி கிரெடிட்டையும் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், ஜியோமி நிறுவனம் இந்தியாவில் தனது மி பைனான்சியல் சர்வீசஸை மூடியுள்ளது. ஏனெனில் நாட்டில் முக்கிய வணிக சேவைகளில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாக ஜியோமி தெரிவித்துள்ளதாக தகவல்.

அரிசி

மத்திய உணவு துறை அமைச்சர் பியூஸ் கோயல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை பெறும் 80 கோடி ஏழைகளுக்கு ஆதரவளிக்க நாட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10.80 கோடி டன் உணவு தானியங்கள் தேவை. இந்த ஆண்டு உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் உணவு தானியங்களின் உற்பத்தி குறையக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அக்டோபர் 14ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 384 கோடி டாலர் குறைந்து 52,450 கோடி டாலராக சரிவடைந்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வசம் உள்ள தங்கத்தின் மதிப்பு 24.7 கோடி டாலர் குறைந்து 3,720 கோடி டாலராக குறைந்துள்ளது. 2021 நவம்பரில் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகபட்சமாக 64,200 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. அது முதல் இதுவரையிலான காலத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு  சுமார் 12,000 கோடி டாலர் சரிவடைந்துள்ளது.