வர்த்தக துளிகள்.. டாப் 7 நகரங்களில் களைகட்டிய வீடுகள் விற்பனை

 
வீடு

2022ம் ஆண்டில் நாட்டின் முன்னணி 7 நகரங்களில் வீடுகள் விற்பனை சிறப்பாக உள்ளது. 2022ம் ஆண்டில் நாட்டின் டாப் 7 நகரங்களில் 3.6 லட்சம் வீடுகள் விற்பனையாகி உள்ளது. இதற்கு முன் அதிகபட்சமாக 2014ம் ஆண்டில் நாட்டின் டாப் 7 நகரங்களில் 3.43 லட்சம் குடியிருப்புகள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. மேலும் இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் வீடுகள் விற்பனை மற்றும் புதிய அறிமுகங்கள், 2019 முழு ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளதாக தகவல்.

ஏற்றுமதி,இறக்குமதி

இந்தியா-சீனா பரஸ்பர வர்த்தகம் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த ஆண்டில் 10,000 கோடி டாலரை தாண்டியுள்ளது. கிழக்கு லடாக் ராணுவ பிரச்சினைக்கு மத்தியில், இந்தியா-சீனா பரஸ்பர வர்த்தகம் முதல் ஒன்பது மாதங்களில் (ஜனவரி-செப்டம்பர்) 10,363 கோடி டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 14.6 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் சீனா 8,966 கோடி டாலர் மதிப்பிலான சரக்குகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

போக்ஸ்வேகன்

போக்ஸ்வேகன் பிராண்ட் 2033ம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் மின்சார கார்களை மட்டுமே உற்பத்தி செய்யும் என்று அதன் உரிமையாளர் தாமஸ் ஷேபர் தெரிவித்தார். முன்னதாக போக்ஸ்வேகன் நிறுவனம் 2033-35ம் ஆண்டு முதல் மின்சார கார்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. தற்போது அதனை காட்டிலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இலக்கை செயல்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோகெமிக்கல்ஸ் ஆலை

உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம் நிலவுகின்ற சூழ்நிலையிலும், சந்தையில் முன்னணியில் இருக்கும் ரஷ்ய நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோகெமிக்கல் தயாரிப்பாளரான SIBUR-ன் உலகளாவிய வர்த்தக பிரிவான  SIBUR இன்டர்நேஷனலின் தலைமை செயல் அதிகாரி ஆண்ட்ரி ஃப்ரோலோவ் கூறுகையில், போர் பதற்றம் காரணமாக ஐரோப்பாவில் சவால்கள் உள்ளன அதேசமயம் இந்தியாவில் எங்களது நிறுவனத்தின் வணிகத்துக்கு வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார்.