வர்த்தக துளிகள்... கூகுள் நிறுவனத்துக்கு மீண்டும் அபராதம்?

 
கூகுள்

இந்திய போட்டி ஆணையம் 3வது முறையாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் டி.வி. சந்தையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் காரணமாக கூகுளுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என தகவல். இந்திய போட்டி ஆணையம்  கடந்த அக்டோபர் 20ம் தேதி கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அதன் ஆதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியதற்காக ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. அதற்கு அடுத்த ஒரு வாரத்துக்குள், கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோர் கொள்கைகள் தொடர்பாக அதன் ஆதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியதற்காக இந்திய போட்டி ஆணையம் ரூ.936.44 கோடி அபராதம் விதித்தது.

மெட்டா

சமூக ஊடக தளமான பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இந்த வாரம் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் இறுதி நிலவரப்படி,  மெட்டா நிறுவனத்தில் உலகம் முழுவதுமாக பல்வேறு தளங்களில் மொத்தம் 87 ஆயிரத்துக்கும் அதிக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வாரம் மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை தொடங்குவதை கருத்தில் கொண்டு, இந்த வாரம் முதல் அத்தியாவசியமற்ற பயணத்தை ரத்து செய்யுமாறு நிறுவன அதிகாரிகள் ஏற்கனவே ஊழியர்களுக்கு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

பல தசாப்தங்களாக இந்தியாவின் மிகவும் லாபகரமான நிறுவனம் என்ற அந்தஸ்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஷ் தன் வசம் வைத்திருந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் காலாண்டில் மிகவும் லாபகரமான நிறுவனம் என்ற பெருமை அல்லது அந்தஸ்தை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் பறிகொடுத்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) 2022 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.14,752 கோடி ஈட்டியுள்ளது. அதேசமயம் அந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபமாக ரூ.13,656 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

பணம்

மணி9 நிறுவனம் நடத்திய தனிநபர் நிதி ஆய்வின்படி, இந்திய குடும்பங்களில் 70 சதவீதம் தங்கள் சேமிப்பை வங்கி டெபாசிட், காப்பீடு, தபால் அலுவலக சேமிப்பு மற்றும் தங்கம் போன்றவற்றில் மேற்கொள்கின்றனர். குறிப்பாக, சேமிப்புகளில் 64 சதவீதம் வங்கி கணக்குகளில் உள்ளன. 19 சதவீத குடும்பங்களுக்கு மட்டுமே காப்பீடு உள்ளது. 22 சதவீத இந்திய குடும்பங்கள் பங்குகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், யு.எல்.ஐ.பி. மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்துள்ளன. இருப்பினும், சொத்து/ நிலத்தில் முதலீடு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.