இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

அன்னிய முதலீடு, நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். 

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், எல்.ஐ.சி., மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் உள்பட சுமார் 85க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை இந்த வாரம் அறிவிக்க உள்ளன. அமெரிக்க பெடரல் வங்கி தொடர்ந்து வட்டி உயர்வு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளும் என்று அறிவித்த பிறகும், இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனர். இது தொடர்ந்தால் பங்குச்சந்தைகளின் ஏற்றத்துக்கு சாதகமாக அமையும்.

வர்த்தகத்தை பாதித்த தொற்றுநோய்… கோல் இந்தியா லாபம் ரூ.2,077.5 கோடியாக சரிந்தது

ஆர்க்கியன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ், பைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ், கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா மற்றும் ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்க உள்ளன. கடந்த 15 தினங்களில் வங்கிகள் வழங்கிய கடன் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. இது வங்கி பங்குகளின் விலை ஏற்றத்துக்கு துணை புரியும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த செப்டம்பர் காலாண்டில் நல்ல லாபம் ஈட்டியிருந்தது. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்

சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இந்த வாரம் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இதுதவிர,  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை,  சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.