வர்த்தக துளிகள்... சிமெண்ட் விலை ரூ.30 வரை உயர வாய்ப்பு..

 
சிமெண்ட் மூட்டைகள்

சிமெண்ட் நிறுவனங்கள் இந்த மாதத்தில் சிமெண்ட் விலையை மூட்டைக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக எம்கே பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் சிமெண்ட் விலை ரூ.3-4 வரை (மூட்டை) உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் மாதங்களில் சிமெண்ட் தேவை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து முக்கிய திருவிழாக்களும் முடிவடைந்து, பரபரப்பான கட்டுமான பருவத்தின் தொடக்கத்தை கொடுக்கும் என்பதை இதற்கு காரணம்.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன பிரிவின் கீழ் வரும் கார்களின் (மாறுபாடு மற்றும் மாடலை பொறுத்து) விலையை சராசரியாக 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் செலவினங்களின் கணிசமான பகுதியை நிறுவனம் ஏற்றுக் கொண்டாலும், ஒட்டு மொத்த முலதன செலவினங்களின் கடும் உயர்வு காரணமாக இந்த குறைந்த  விலை உயர்வு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது  என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று (நவம்பர் 7) முதல் அமலுக்கு வருவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

பணம்

மணி9 நிறுவனம் நடத்திய தனிநபர் நிதி ஆய்வின்படி, இந்திய குடும்பங்களில் 42 சதவீதம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.23 ஆயிரம் என தெரியவந்துள்ளது. அதேசமயம் 46 சதவீத இந்திய குடும்பங்களின் மாத சராசரி வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. இந்திய குடும்பங்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே ஆடம்பர வாழ்க்கை தரத்தை கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் அதிக வருமானம் கொண்ட பிரிவினரை சேர்ந்தவர்கள் (உயர்-நடுத்தர மற்றும் பணக்காரர்கள்) என தெரியவந்துள்ளது.

இரும்புத்தாது

இந்திய கனிம தொழில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.கே. சர்மா பேட்டி ஒன்றில் கூறியதாவது: கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் இரும்பு தாது ஏற்றுமதி கிட்டத்தட்ட பூஜ்யமாக குறைந்துள்ளது. இரும்பு தாது ஏற்றுமதி மீதான அதிக வரி  மற்றும் சீனாவில் இரும்பு தாதுவுக்கான தேவை குறைந்ததும் நாட்டின் இரும்பு தாது ஏற்றுமதி சரிவுக்கு காரணம். தொடர்ந்து ஏற்றுமதி வரி அதிகமாக இருக்கும் வரை இரும்பு தாது ஏற்றுமதியும் சரிவை சந்திக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.