வர்த்தக துளிகள்... சலூன் வர்த்தகத்திலும் நுழையும் அம்பானி நிறுவனம்..

 
சலூன்

கச்சா எண்ணெய், நுகர்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளில் கொடி கட்டி பறக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது சலூன் வர்த்தக துறையில் காலடி வைக்க உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் நேச்சுரல்ஸ்  சலூன் மற்றும் ஸ்பா நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்.

வேலையின்மை

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புற வேலையின்மை விகிதம் அதிகரித்ததே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.43 சதவீதமாக குறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபரில் கிராமப்புற வேலையின்மை 8.04 சதவீதமாகவும், நகர்புற வேலையின்மை விகிதம் 7.21 சதவீதமாகவும் இருந்தது.

ஐ போன்

ஆப்பிள் நிறுவனத்தின் தைவான் ஒப்பந்த உற்பத்தியாளரான பெகாட்ரான் கார்ப்  இந்தியாவில் லேட்டஸ்ட் ஐபோன் 14 மாடலை அசெம்பிள் செய்ய தொடங்கியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் ஐபோன் 14-ஐ உற்பத்தி செய்யும் இரண்டாவது ஆப்பிள் சப்ளையர் நிறுவனம் பெகாட்ரான் கார்ப் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்ஸ்கான் நிறுவனம் கடந்த செப்டம்பரில் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை தொடங்கியது. சீனாவில் உள்ள பாக்ஸ்கானின் ஆலை உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையாகும். கோவிட் லாக்டவுன் காரணமாக அந்த ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது.

அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அக்டோபர் 28 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 656 கோடி டாலர் அதிகரித்து 53,108 கோடி டாலராக உயர்ந்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 52,450 கோடி டாலராக இருந்தத. ரிசர்வ் வங்கி வசம் உள்ள தங்கத்தின் மதிப்பு 55.6 கோடி டாலர் உயர்ந்து 3,776 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 2021 நவம்பரில் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகபட்சமாக 64,200 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. அது முதல் இதுவரையிலான காலத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு  சுமார் 11,000 கோடி டாலருக்கு மேல் சரிவடைந்துள்ளது.