வர்த்தக துளிகள்... ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தும்.. கோல்ட்மேன் சாக்ஸ்

 
இந்திய ரிசர்வ் வங்கி

அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவைகள் நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரிசர்வ் வங்கி தனது டிசம்பர் மாத நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.50 சதவீதமும், பிப்ரவரி மாத நிதிக் கொள்கை கூட்டத்தில் 0.35 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளது. 2023ம் ஆண்டில் இந்தியாவின் சில்லரை விலை பணவீக்கம் 6.1 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

சிஸ்கோ

மெட்டா, அமேசான் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தகவல். சிஸ்கோ நிறுவனத்துக்கு உலகம் முழுவதுமாக மொத்தம் 83 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 5 சதவீதம் பேரை அதாவது 4 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்களை சிஸ்கோ நிறுவனம் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அந்நாட்டு ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பார்தி ஏர்டெல்

தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், ஹரியானா மற்றும் ஒடிசாவில், தனது குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்துக்கான (28 நாள் சேவை) கட்டணத்தை 57 சதவீதம் உயர்த்தி ரூ.155ஆக நிர்ணயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனதம் தனது புதிய திட்டத்தை சோதனை செய்ய தொடங்கியுள்ளதாகவும், அதன் முடிவில் அடிப்படையில் அதனை இந்தியா முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்.

எஸ்ஸார் குழுமம்

இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு கூட்டு நிறுவனம் எஸ்ஸார் குழுமம் எரிசக்தி முதல் தொழில்நுட்பம் வரை பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது . எஸ்ஸார் குழுமம், இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 லட்சம் கோடி கடனை திருப்பி செலுத்தியதையடுத்து, தற்போது தன்னை கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுத்துள்ளதாக எஸ்ஸார் குழுமம் தெரிவித்துள்ளது.