இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

நவம்பர் மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு இம்மாதம் 24ம் தேதியன்று (வியாழன்) முடிக்கப்படும் என்பதால் பங்குச் சந்தைகளில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆர்க்கியன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன. கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ் (செவ்வாய்கிழமை), கிரீன் எனர்ஜி சர்வீசஸ் (புதன் கிழமை) , கீஸ்டோன் ரியல்டர்ஸ் (வியாழன்) ஆகிய நிறுவன பங்குகளும் இந்த வாரம் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன. 

கச்சா எண்ணெய்

தொடர்ந்து இரண்டாவது வாரமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சென்ற வாரமும் குறைந்தது. கச்சா எண்ணெய் விலை சரிவு இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு சாதகமான விஷயம். அன்னிய முதலீட்டாளர்கள் இந்த மாதம் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இது தொடர்ந்தால் பங்குச் சந்தைகளுக்கு சாதகம். உக்ரைனின் எல்லைக்கு அருகில் போலந்தின் கிழக்கு பகுதியில் அண்மையில் ஏவுகணை தாக்குதல் நடந்தது உலகையே உலுக்கியது இது உக்ரைனில் போர் தீவிரமடையக் கூடும் என்ற எச்சரிக்கையை எழுப்பியுள்ளது. 

அமெரிக்க பெடரல் வங்கி

அமெரிக்க எஃப்.ஒ.எம்.சி. உறுப்பினர்கள் இந்த வாரம் பேசவாய்ப்புள்ளது. அவர்களின் கருத்துக்கள் சந்தைகளில் எதிர்வினையாற்றும். வரும் வியாழக்கிழமை வெளியாக உள்ள அமெரிக்க பெடரல் மினிட்ஸ் அறிக்கையை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதவிர, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இந்த வாரம் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இதுதவிர,  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு,  சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.