வர்த்தக துளிகள்.. வேலை தர நாங்க ரெடி.. டிவிட்டரிலிருந்து நீக்கப்பட்ட பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் கூ நிறுவனம்

 
கூ

நம் நாட்டை சேர்ந்த சமூக ஊடமான கூ நிறுவனம் சர்வதேச அளவில் இரண்டாவது மிகப்பெரிய மைக்ரோபிளாக்கிங் தளமாகும். கூ நிறுவனம் தற்போது டிவிட்டரிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களில் பலரை தங்களது நிறுவனத்தில் பணியமர்த்த உள்ளதாக  கூ நிறுவனத்தின் இணை நிறுவனர் மயங் பிடாவட்கா தெரிவித்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தின் புதிய முதலாளியான எலான் மஸ்க், நிறுவனத்தின் செலவினத்தை குறைக்கும் நோக்கில் அதிகளவில் பணியாளர்களை நீக்கினார்.

அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு நவம்பர் 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கடந்த ஒராண்டில் இல்லாத அளவுக்கு சுமார் 1,500 கோடி டாலர் உயர்ந்து 54,472 கோடி டாலராக அதிகரித்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 52,999 கோடி டாலராக இருந்தது. 2021 நவம்பரில் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகபட்சமாக 64,200 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. 

தேயிலை பறிக்கும் தோட்ட தொழிலாளர்கள்

தேயிலை வாரிய தரவுகளின்படி, கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு 14.02 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 14.8 சதவீதம் அதிகமாகும். 2021 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலத்தில் நம் நாடு 12.21 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்து இருந்தது.

ஜெட் ஏர்வேஸ்

மீண்டும் விண்ணில் பறக்க (விமான சேவையை தொடங்க) கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், பணியாளர்களில் ஒரு பகுதியினரை, வரும் ஊதியம் இல்லாமல் விடுப்பில் அனுப்பியுள்ளதாகவும் தகவல். மேலும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, தலைமை நிதி அதிகாரி மற்றும் துறை தலைவர்களின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்கப்படலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.