வர்த்தக துளிகள்.. கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய பொதுத்துறை வங்கிகள்

 
பஞ்சாப் நேஷனல் வங்கி

பொதுத்துறை வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை எம்.சி.எல்.ஆர். அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி எம்.சி.எல்.ஆர். அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.30 சதவீதம் உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், பேங்க் ஆப் இந்தியா எம்.சி.எல்.ஆர். அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 

பணம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது சொத்து உருவாக்கத்திற்கான செலவுகளை அதிகரிப்போம் என வாக்குறுதி அளித்து இருந்தது. அதன்படி, தற்போது அரசின் மூலதன செலவினத்தை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மத்திய அரசு மூலதன செலவினமாக ரூ.3.42 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் மத்திய அரசு மூலதன செலவினமாக ரூ.2.29 லட்சம் கோடியை மேற்கொண்டு இருந்தது.

டாடா

டாடா குழுமம் தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில்  ஐ போன் உதிரிபாகங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து அதிக ஆர்டர்களை பெறும்  முயற்சியின் ஒரு பகுதியாக, எலக்ட்ரானிக்ஸ் தொழற்சாலையில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்குள் 45 ஆயிரம் பெண் பணியாளர்களை பணியமர்த்த டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி நாளை சிறப்பு நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்றும், உயர்த்தாது என்று இரு விதமான கருத்துக்கள் நிலவுகிறது. இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் குழுவின் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் சவுமியா காந்தி கோஷ் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் சிறப்பு நிதிக் கொள்கை கூட்டத்தில் கடந்த 3 காலாண்டுகளாக பணவீக்கத்தை சமாளிப்பதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக மட்டுமே முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.