வர்த்தக துளிகள்.. மாநிலங்கள் ஒப்புக்கொண்டால் பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மோடி அரசு தயார்.. ஹர்தீப் சிங் பூரி

 
பெட்ரோல், டீசல்

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வர மோடி அரசு தயாராக உள்ளது. ஆனால் எரிபொருள் மற்றும் மது வாயிலாக அதிக வருவாய் ஈட்டக்கூடிய மாநிலங்கள் அதற்கு உடன்பட வாய்ப்பில்லை. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவதற்கு மாநிலங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். மாநிலங்கள் நடவடிக்கை எடுத்தால், நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் முழுவதும் தயாராக இருந்தோம். அது என் புரிதல், அதை எப்படி செயல்படுத்துவது என்பது வேறு பிரச்சினை. இந்தக் கேள்வியை நிதி அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ

தொலைத்தொடர்பு உள்பட ஒவ்வொரு துறைகளிலும் நுகர்வோர் அதிகம் விரும்பும் மற்றும் பிராண்ட்களின் வலிமைக்கு ஏற்ப இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பிராண்ட்கள் 2022 தரவரிசை பட்டியலை டி.ஆர்.ஏ. வெளியிட்டுள்ளது. டி.ஆர்.ஏ. அறிக்கையின்படி, தொலைத்தொடர்பு பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.எஸ்.என்.  உள்ளன. நிதி மற்றும் வங்கி சேவைகள் பிரிவில் எல்.ஐ.சி. முதலிடத்தில் உள்ளது. அடுத்து எஸ்.பி.ஐ. (2வது இடம்), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (3வது இடம்) உள்ளன.

கோதுமை

2022ம் ஆண்டில் சர்வதேச நாடுகள் உணவு பொருட்கள் இறக்குமதிக்கான உலகளாவிய செலவினம் 1.94 லட்சம் கோடி டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். விலைவாசி உயர்வே இதற்கு முக்கிய காரணம்  என்று ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

டாடா,ஏர் இந்தியா

டாடா சன்ஸ் தனது விமான நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு செயல்முறையை தொடங்கியுள்ளதால், விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிஸ் ஆகியவை விரைவில் ஏர் இந்தியா பிராண்டில் இணைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு பணிகள் முடிந்ததும், விமானங்கள் எண்ணிக்கை மற்றும் சந்தை பங்கின் அடிப்படையில் ஏர் இந்தியா நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமாக மாறும்.