இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். 

கடந்த அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் இன்று வெளிவருகிறது. பெரும்பாலான நிபுணர்கள் கடந்த மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்திருக்கும் என்றே எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரம் 2 சதவீதம் உயர்ந்தது. இந்த வாரத்திலும் ரூபாய் மதிப்பு நேர்மறையாக இருந்தால் அது பங்கு வர்த்தகத்துக்கு சாதகமாக இருக்கும். அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகித உயர்வு நடவடிக்கையை நிதானமாக மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக அன்னிய முதலீட்டளார்கள் இந்திய பங்குகளில் படிப்படியாக  முதலீட்டை அதிகரித்து வருகின்றனர்.  இந்த நிலை தொடர்ந்தால் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொடும்.

பணவீக்கம்

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், ஓ.என்.ஜி.சி., பயோகான், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், பாரத் போர்ஜ், அப்பல்லோ டயர்ஸ், ஐ.ஆர்.சி.டி.சி. மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்பட சுமார் 1,400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை இந்த வாரம் வெளியிட உள்ளன. எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான கெய்ன்ஸ் டெக்னாலஜி  நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இன்று நிறைவடைகிறது. காற்றாலை ஆப்பரேட்டர் மற்றும் பராமரிப்பு சேவை வழங்கும் நிறுவனமான ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு நாளை முடிவடைய உள்ளது. கீஸ்டோன் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இன்று தொடங்கி 16ம் தேதி நிறைவடைகிறது.

கச்சா எண்ணெய்

ப்யூஷன் மைக்ரோ பைனான்ஸ் (நாளை) மற்றும் பிகாஜி புட்ஸ் இன்டர்நேஷனல் (புதன்) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இந்த வாரம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன. சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இந்த வாரம் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இதுதவிர,  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை,  சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.