வர்த்தக துளிகள்.. வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்த பேங்க் ஆஃப்

 
பேங்க் ஆஃப் பரோடா வங்கி

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா தனது வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 8.25 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும் குறிப்பிட்ட கால சலுகையின் கீழ் பிராசஸிங் கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளது. வீட்டு கடனுக்கான புதிய வட்டி விகிதம் இன்று முதல் டிசம்பர் இறுதி வரை இருக்கும் என்று பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது. 

சக்திகந்த தாஸ்

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் கூறியதாவது: கைவசம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பை ரிசர்வ் வங்கி கண்மூடித்தனமாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அது அப்படி இல்லை. மழை காலத்துக்காக இருப்புகள் குவிக்கப்படுகின்றன. மழை பெய்யும் போது, குடையை பயன்படுத்த வேண்டும் என்று நான் முன்பே கூறியுள்ளேன். ரிசர்வ் வங்கியில் அன்னிய செலாவணி கையிருப்பை காட்சி பொருளாாக வைப்பதற்காக மட்டுமே நாங்கள் கையிருப்பை வைத்திருக்கவில்லை என தெரிவித்தார்.

சமையல் எண்ணெய்

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 6 மாதங்களில் சமையல் எண்ணெய் விலை 9 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்தது மற்றும் மத்திய அரசின் முடிவுகளே (சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான வரி குறைப்பு) இதற்கு காரணம். கடந்த 2 மாத காலத்தில் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 200 முதல் 300 டாலர் வரை குறைந்துள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் புள்ளிவிவரத்தின்படி, நம் நாட்டில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய 2 மாதங்களில் 85 லட்சம் பேர் மாதாந்திர சம்பளம் பெறும் வேலைகளில் சேர்ந்துள்ளனர். இதனையடுத்து நாட்டில் சம்பளம் பெறும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 8.5-8.6 கோடியாக அதிகரித்துள்ளது. கணக்கீடு காலத்தில் நகர்புறங்களில் மாதாந்திர சம்பள வேலைகளில் அதிகளவில் இணைந்துள்ளனர்.