வர்த்தக துளிகள்.. மொத்த நேரடி வரி வசூல் ரூ.10.54 லட்சம் கோடி

 
நேரடி வரி வசூல்

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும். இந்த நிதியாண்டில் கடந்த வியாழன் வரையிலான காலத்தில் (ஏப்ரல் 1 முதல் நவம்பர் 10 வரை)  மொத்த  நேரடி வரி வசூல் ரூ.10.54 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும் 31 சதவீதம் அதிகமாகும் என்று நேரடி வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு நவம்பர் 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 110 கோடி டாலர் குறைந்து 52,999 கோடி டாலராக சரிவடைந்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 28ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 53,108 கோடி டாலராக இருந்தத. ரிசர்வ் வங்கி வசம் உள்ள தங்கத்தின் மதிப்பு 70.5 கோடி டாலர் குறைந்து 3,706 கோடி டாலராக குறைந்துள்ளது. 2021 நவம்பரில் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகபட்சமாக 64,200 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. அது முதல் இதுவரையிலான காலத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு  சுமார் 11,000 கோடி டாலருக்கு மேல் சரிவடைந்துள்ளது.

டிவிட்டர்

டிவிட்டர் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு கடந்த 2021-22ம் நிதியாண்டில் ரூ.31.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு முந்தைய 2020-21ம் நிதியாண்டில்  ரூ.7.8 கோடி லாபம் கிடைத்து இருந்தது. 2021-22ம் நிதியாண்டில் டிவிட்டர் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் சுமார்  இரண்டு அதிகரித்து ரூ.157 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் 2020-21ம் நிதியாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.86 கோடி ஈட்டியிருந்தது.

தொழில்துறை

கடந்த செப்டம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி  3.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2022 ஆகஸ்ட் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 0.8 சதவீதம் குறைந்து இருந்தது என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாத  தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரம் பங்குச் சந்தை முடிவடைந்த பிறகு வெளியானதால், அவற்றின் தாக்கம் வரும் இன்றைய பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.