வர்த்தக துளிகள்.. நாட்டின் ஒரு மாத மின்சார பயன்பாடு 12,838 கோடி யூனிட்

 
மின்சார பயன்பாடு

மத்திய மின்சார துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, நம் நாட்டில் கடந்த ஜூலை மாதத்தில் பரவலாக மழை பெய்ததற்கு மத்தியில் அந்த மாதத்தில் ஒட்டு மொத்த அளவில் 12,838 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2021 ஜூலை மாதத்தில் 12,372 கோடி யூனிட் அளவுக்கே மின்சாரம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. ஆக, கடந்த ஜூலை மாதத்தில் நம் நாட்டில் மின்சார பயன்பாடு 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெட்ரோல் பம்ப்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) பெட்ரோல் மற்றும் டீசலை நஷ்டத்தில் விற்பனை செய்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் காலாண்டில் பெட்ரோலை லிட்டருக்கு ரூ.10 நஷ்டத்திலும், டீசலை லிட்டருக்கு ரூ.14 நஷ்டத்திலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஜூன் காலாண்டில் நிகர நஷ்டத்தை சந்திக்க வழிவகுத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து ஏற்றுமதி

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்திய மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி 8 சதவீதம் உயர்ந்து 630 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்கள் மேம்பட்டவுடன் ஏற்றுமதி மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022-23ம் நிதியாண்டு இறுதியில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் 10 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறை

இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்)  மத்திய பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 21.2 சதவீதத்தை தொட்டுள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் மத்திய அரசுக்கு ரூ.5.96 லட்சம் கோடி வருவாய் வந்துள்ளது. அதேசமயம், மத்திய அரசு ரூ.9.48 லட்சம் கோடிக்கு செலவினங்களை மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசுக்கு அந்த காலாண்டில் ரூ.3.52 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.