வர்த்தக துளிகள்.. கடந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவு உயர்வு

 
நேரடி வரி வசூல்

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும். கடந்த 2021-22ம் நிதியாண்டில் மத்திய அரசின் நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.14.09 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது சென்ற முந்தைய நிதியாண்டை (2020-21) காட்டிலும் 49.02 சதவீதம் அதிகமாகும். 2020-21ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு நேரடி வரிகள் வாயிலாக ரூ.9.45 லட்சம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ஜே.பி.மோஹபத்ரா தெரிவித்தார்.

எல்.ஐ.சி.

எல்.ஐ.சி.யின் புதிய பங்கு வெளியீடு வரும் மே 4ம் தேதி தொடங்கி 9ம் தேதி நிறைவடைகிறது. இந்த புதிய பங்கு வெளியீட்டில் எல்.ஐ.சி.யின் 22.13 கோடி பங்குகள் வெளியிடப்பட உள்ளது. ஒரு பங்கின் விலை 902-949 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.60ம், சில்லரை மற்றும் பணியாளர்களுக்கு ரூ.45ம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதானி வில்மர்

ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் அதானி குழுமத்தை சேர்ந்த அதானி வில்மர் நிறுவனம் இடம் பிடித்ததுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று அதானி வில்மர் நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. ரூ.1 லட்சம் கோடி பங்கு சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில், அதானி வில்மர் நிறுவனத்தோடு சேர்த்து இதுவரை அதானி குழுமத்தின் 7 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

வட்டி விகிதம் உயர்வு

இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் வரும் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ  ரேட்) ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கணித்ததை காட்டிலும்  பணவீக்கம் அதிகரித்து வருவதால், இந்திய ரிசர்வ் வங்கி விரைவாக செயல்பட (வட்டி விகிதத்தை உயர்த்துவது) அழுத்தம் கொடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.