இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 
பங்கு வர்த்தகம்

டிசம்பர் மாத வாகன விற்பனை, ஒமைக்ரான் நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு  செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதியன்று நம் நாட்டில் புதிதாக மொத்தம் 22,775 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 1,540 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள். பல மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையை எடுக்க தொடங்கி விட்டன. கொரோான வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த டிசம்பர் மாத வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரங்களை மாருதி சுசுகி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்களின் வாகன விற்பனை கடந்த மாதத்தில் சிறப்பாக இருந்தது.

கொரோனா வைரஸ்

அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும், புத்தாண்டு விடுமுறை சீசன் காரணமாக அவர்கள் பங்குகளை விற்பனை செய்யும் வேகம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். இது பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக உள்ளது. அமெரிக்க பெடரல் வங்கியின் வெளிசந்தை கமிட்டி கடந்த டிசம்பர் மாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பான அறிக்கையை வரும் 6ம் தேதி (வியாழன்) வெளியிடுகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் இந்த அறிக்கையை மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.

கச்சா எண்ணெய்

டிசம்பர் மாதத்துக்கான மார்க்கிட் உற்பத்தி பி.எம்.ஐ. (இன்று), மார்க்கிட் கம்போசிட்  பி.எம்.ஐ. மற்றும் சேவைகள் பி.எம்.ஐ. (புதன்) ஆகியவை இந்த வாரம் வெளிவருகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர  சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்  உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.