இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 
பங்கு வர்த்தகம்

நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவு, கொரோனா நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு  செய்துள்ளனர்.

பங்குச் சந்தைகளில் பட்டியிலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட தொடங்கி விட்டன. இந்த வாரம் டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், எச்.டி.எப்.சி. வங்கி உள்பட பல முன்னணி நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவ வருகிறது. இது பொருளாதார வளர்ச்சியின் ஏற்றத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். அதேசமயம் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

டி.சி.எஸ்.

டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் (புதன்கிழமை), நவம்பர் மாத தொழில்துறை உற்பத்தி (புதன்கிழமை) மற்றும் மொத்த விலை பணவீக்கம் (வெள்ளிக்கிழமை) குறித்த புள்ளிவிவரங்கள் இந்தவாரம் வெளிவருகிறது. கடந்த டிசம்பர் 24ம் தேதியுடன் முடிவடைந்த 15 தினங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட், வழங்கிய கடன் குறித்த புள்ளிவிவரம், ஜனவரி 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளிவிவரம், கடந்த டிசம்பர் மாத வர்த்தக பற்றாக்குறை குறித்து புள்ளிவிவரம் ஆகியவை வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

கொரோனா வைரஸ்

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள 2021-22ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த முன்கூட்டிய மதிப்பீட்டில் 9.2 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது இன்றைய பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக பங்குகளை விற்பனை செய்வதில் மும்முரமாக இருந்த அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வாரம் மீண்டும் பங்குகளை வாங்க குவித்தனர். நிகர அடிப்படையில் ரூ.1,000 கோடிக்கு மேல் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய நிறுவன பங்குகளை வாங்கி குவித்தனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளில் முதலீட்டை குவித்து வருகின்றனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர  சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்  உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.