பங்குச் சந்தைகளை பதம் பார்த்த கொரோனா… சென்செக்ஸ் 871 புள்ளிகள் வீழ்ச்சி..

 

பங்குச் சந்தைகளை பதம் பார்த்த கொரோனா… சென்செக்ஸ் 871 புள்ளிகள் வீழ்ச்சி..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 871 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

நம் நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் கடும் வேகத்தில் பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் வாரஇறுதி லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளது மேலும் சில மாநிலங்களில் லாக்டவுன் விதிக்கப்படலாம் என்று பேசப்படுகிறது. இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய பங்கு வர்த்தக சரிவுக்கு கொரோனா ஒரு முக்கிய காரணம். சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தைகளை பதம் பார்த்த கொரோனா… சென்செக்ஸ் 871 புள்ளிகள் வீழ்ச்சி..
கொரோனா வைரஸ் பரிசோதனை

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,059 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,896 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 186 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.205.14 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.10 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்குச் சந்தைகளை பதம் பார்த்த கொரோனா… சென்செக்ஸ் 871 புள்ளிகள் வீழ்ச்சி..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 870.51 புள்ளிகள் சரிந்து 49,159.32 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 229.55 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,637.80 புள்ளிகளில் முடிவுற்றது.