பாலிவுட் காதல் டு பிளாட்பார வாழ்க்கை – சென்னைப் பட்டதாரி பெண் உண்மைக்கதை!

 

பாலிவுட் காதல் டு பிளாட்பார வாழ்க்கை – சென்னைப் பட்டதாரி பெண் உண்மைக்கதை!

குடும்ப உறவுகள் பிரிந்துச் சென்ற பிறகுதான் அன்பின் அருமை தெரியும். இது சென்னையில் நடந்த உண்மைக் கதை. ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள். குடும்பத் தலைவனுக்கு மத்திய அரசு பணி. சென்னை சாஸ்திரி பவனில் அவர் பணியாற்றினார். தன்னுடைய மூன்று மகள்களையும் படிக்க வைத்தார். மூத்தவள் பட்டதாரியானாள். அடுத்த மகள்களும் தாங்கள் விரும்பிய படிப்பை படித்தனர். இப்படி சந்தோஷமாக சென்ற இந்த குடும்பத்தில் புயல் வீச தொடங்கியது. அதுவும் சாதாரண புயல் அல்ல. குடும்பத்தையே உருக்குலைத்து செல்லும் அளவுக்கு அந்தப் புயல் வீசியது.

பாலிவுட் காதல் டு பிளாட்பார வாழ்க்கை – சென்னைப் பட்டதாரி பெண் உண்மைக்கதை!

மூத்த மகளுக்கு சினிமா மீது தீராத காதல். அதுவும் பாலிவுட் ஹீரோக்களை ஒரு தலையாக காதலிக்கத் தொடங்கினாள். மூத்த மகளுக்கு பாலிவுட் என்றால் அடுத்தவளுக்கு கிரிக்கெட் மீது லவ். கிரிக்கெட் வீரர்களின் ரசிகையாக இருந்த அவரும் ஒரு வீரரை காதலித்தார். இளையவள் மட்டும் பெற்றோருக்கு பிடித்தவளாக வளர்ந்தாள். இந்தச் சமயத்தில் மூத்த மகளுக்கு வரன் தேடியபோதெல்லாம், தன்னுடைய பாலிவுட் ஹீரோ காதலால் மாப்பிள்ளைகளைத் தட்டிக்கழித்தாள். மூன்று தடவை திருமணம் வரை சென்ற பேச்சுவார்த்தை மூத்தவளின் பிடிவாத காதலால் நின்றுப்போனது. தான் காதலித்த கிரிக்கெட் வீரருக்கு திருமணம் என்றதும் தூக்கில் தொங்கிவிட்டாள். மகளின் மறைவு பெற்றோரை மனவருத்தமடைய வைத்தது. அதனால் இளைய மகளை சென்னையில் திருமணம் செய்து கொடுத்தார். தற்போது அவர் குழந்தைகளுடன் சந்தோஷமாக கணவருடன் வாழ்ந்துவருகிறார்.

பாலிவுட் காதல் டு பிளாட்பார வாழ்க்கை – சென்னைப் பட்டதாரி பெண் உண்மைக்கதை!

அப்பாவின் ஆதரவு இருக்கும் வரை மூத்த மகளுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. 2006-ம் ஆண்டுக்குப்பிறகு மூத்தவளின் வாழ்க்கை திசைமாறியது. வீட்டை விட்டு வெளியேறிய அவளுக்கு பிளாட்பாரம்தான் வீடானது. கிடைத்த உணவை சாப்பிட்டுவிட்டு வாழ்நாளை கடத்தினாள். 14 ஆண்டுகள் இப்படிதான் அவளின் வாழ்க்கைச் சென்றது. கொரோனாவுக்குப்பிறகு அவளுக்கு சாப்பாடுகூட கிடைக்கவில்லை. கால்போன போக்கில் சென்னையில் வலம்வந்தாள். கொரோனா முழு ஊரடங்கு என்பதால் நேற்று சென்னை நகரம் வெறிச்சோடியது. ரோந்து பணியில் சென்னை போலீஸார் ஈடுபட்டனர்.

தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, போலீஸ் ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்தார். மேடவாக்கம் சாலையில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு இளம்பெண் படுத்திருந்தாள். அதைப்பார்த்ததும் டிரைவரிடம் காரை நிறுத்தக் கூறினார். கீழே இறங்கிய இன்ஸ்பெக்டர், குப்பை தொட்டியின் அருகே பசியால் படுத்திருந்த இளம்பெண்ணிடம் பேசினார். யாரும்மா நீ என்று இன்ஸ்பெக்டர் கேட்டதும் எனக்கு டீ வேண்டும் என்று அந்தப் பெண் கேட்டாள். டிரைவர் மூலம் டீக்கு ஏற்பாடு செய்த இன்ஸ்பெக்டர், அந்தப் பெண்ணிடம் விசாரித்தார். அப்போதுதான் அவளின் பெயர் பாரதி என்று தெரிந்தது. அவரின் அப்பா மத்திய அரசு ஊழியர். உறவுகள் இல்லாததாலும் சினிமா காதலாலும் பாரதியின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதை தெரிந்த இன்ஸ்பெக்டர் கண்கள் கலங்கின.

பாலிவுட் காதல் டு பிளாட்பார வாழ்க்கை – சென்னைப் பட்டதாரி பெண் உண்மைக்கதை!

உடனடியாக பாரதியை போலீஸ் ஜீப்பில் ஏற்றிய இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். காவல் நிலைய பாத்ரூம்பில் பாரதியை குளிக்க வைத்த இன்ஸ்பெக்டர் புதியதாக சுடிதார்களை வாங்கிக் கொடுத்தார். சந்தோஷமாக அதை வாங்கி அணிந்துக் கொண்ட பாரதியை இப்போது இன்ஸ்பெக்டர் பார்த்தபோது குப்பைத் தொட்டியில் படுத்திருந்த பாரதியா இது என்ற சந்தேகம் காவல் நிலையத்தில் உள்ள அனைவருக்கும் வந்தது. அதன்பிறகு பாரதியிடம் என்ன படித்திருக்கிறாய் என்று இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு பிஎஸ்சி படித்துள்ளேன். படிக்கும் காலத்தில் எனக்குள் ஏற்பட்ட பாலிவுட் ஒருதலைக் காதலால் என் வாழ்க்கை இப்படியாகிவிட்டது. அப்பாவின் பென்ஷனை வாங்கினாலே நான் சந்தோஷமாக வாழலாம். ஆனால் நிரந்தர முகவரி இல்லாததால் பென்ஷன் வரவில்லை. நிரந்தர முகவரி இல்லாததால் நாங்கள் குடியிருந்த இடங்களிலேயே சுற்றி சுற்றி வருகிறேன் என்று கண்ணீர்மல்க கூறினாள்.

பாலிவுட் காதல் டு பிளாட்பார வாழ்க்கை – சென்னைப் பட்டதாரி பெண் உண்மைக்கதை!

பாரதியின் சோகக் கதையைக் கேட்ட போலீஸார் அவரை உறிவனர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். புளியந்தோப்பில் அத்தை வீடு இருப்பதாகக் கூறிய பாரதியால் முகவரியைச் சொல்ல தெரியவில்லை. பாரதி கூறிய விவரங்கள் அடிப்படையில் போலீஸ் டீம் சென்று விசாரித்தது. சில மணி நேர விசாரணையில் பாரதியின் அத்தையைக் கண்டுபிடித்தனர். பின்னர் பாரதியை போலீஸ் ஜீப்பில் அழைத்துச் சென்று அத்தையிடம் பேசினர். அப்போது பாரதியின் அத்தை அவளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அதனால் அங்கிருந்து சோகத்தோடு போலீஸார் திரும்பினார். அடுத்து பாரதியின் ஒரே ரத்த சொந்தம் அவரின் சகோதரி. அவர், ஆவடியை அடுத்த அண்ணனூரில் குடியிருக்கும் தகவல் கிடைத்தது. அவரின் முகவரியைக் கண்டுபிடித்த போலீஸார் அவரிடமும் பேசிபார்த்தனர். அப்போது பாரதியின் சகோதரி, தன்னுடைய குடும்ப சூழலைக்கூறி தன்னால் பாரதியை பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்.

பாலிவுட் காதல் டு பிளாட்பார வாழ்க்கை – சென்னைப் பட்டதாரி பெண் உண்மைக்கதை!

இதையடுத்து போலீஸாரே பாரதியை காப்பகத்தில் சேர்க்க முயற்சி செய்தனர். கொரோனா காலக்கட்டம் என்பதால் பாரதியை காப்பகத்தில் சேர்க்க முடியாத சூழல். அதன்பிறகு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் விடா முயற்சியால் சென்னை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்க அனுமதி கிடைத்தது. கொரோனா பரிசோதனை முடிந்து பாரதி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். கொஞ்சம் மனநல பாதிப்பு பாரதிக்கு இருப்பதை தெரிந்த போலீஸார் அதுதொடர்பான சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். பாரதியின் 14 ஆண்டு கால வாழ்க்கை எத்தனை சோகத்தையும் கஷ்டத்தையும் கடந்தது என்றுகூட அவரால் சொல்ல முடியவில்லை.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம் கேட்டதற்கு, ரோந்து பணிக்கு செல்லும்போதெல்லாம் என் கண்கள் ஆதரவற்றவர்களின் மீதே இருக்கும். இதுவரை 30 பேரை காப்பகத்தில் சேர்த்துவிட்டுள்ளேன். அதில் பாரதியின் கதையைக் கேட்டபோது மனசு கஷ்டமாக இருந்தது. பாரதிக்கு உறவுகள் இருந்தும் அவரை அரவணைக்க அவர்களுக்கு மனமில்லை. அதனால்தான் 14 ஆண்டுகளாக பிளாட்பாரத்திலேயே வாழ்ந்துவந்துள்ளார். விரைவில் பாரதியின் வாழ்க்கையிலும் வசந்தம் வீசும் என்ற நம்பிக்கை மட்டுமே இப்போதைக்கு இருக்கிறது என்றார்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் அவரின் போலீஸ் டீம்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

-எஸ்.செல்வம்