மெகபூபா முப்தி பேச்சுக்கு பதிலடி.. மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றிய பா.ஜ.க. தொண்டர்கள்

மெகபூபா முப்தி பேச்சுக்கு பதிலடி.. மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றிய பா.ஜ.க. தொண்டர்கள்

தேசிய கொடியை ஏற்றமாட்டேன் என்ற மெகபூபா முப்தியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலடியாக அவருடைய கட்சி அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் தேசிய கொடியை ஏற்றினர்.

ஜம்மு அண்டு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி உள்பட மொத்தம் 7 கட்சிகள் இணைந்து குப்கர் அறிக்கைக்கான கூட்டணியை அண்மையில் உருவாக்கின. இது தொடர்பாக மெகபூபா முப்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீருக்கான கொடி மீண்டும் நடைமுறைப்படுத்தாத வரை தேசிய கொடியை ஏற்றவோ, பிடிக்கவோ மாட்டேன் மற்றும் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என தெரிவித்தார்.

மெகபூபா முப்தி பேச்சுக்கு பதிலடி.. மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றிய பா.ஜ.க. தொண்டர்கள்
மெகபூபா முப்தி

மெகபூபா முப்தியின் இந்த பேச்சு கடும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் நேற்று ஸ்ரீநகரில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் தேசிய கொடி ஏற்றினர். முன்னதாக ஸ்ரீநகரில் லால் சவுக்கில் உள்ள கிளாக் டவரில் பா.ஜ.க.வின் தேசிய கொடியை ஏற்ற முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மெகபூபா முப்தி பேச்சுக்கு பதிலடி.. மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றிய பா.ஜ.க. தொண்டர்கள்
மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் பா.ஜ.க..தொண்டர்கள்

ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370 சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைககளை மேற்கொள்வதற்கு முன்னதாக அம்மாநில அரசியல் தலைவர்கள், மெகபூபா முப்தி உள்பட முன்னாள் முதல்வர்கள் பலர் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் சுமார் 15 மாநிலங்களுக்கு பிறகு மெகபூபா முப்தி காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த பிறகு காஷ்மீர் மீண்டும் சிறப்பு அந்தஸ்து வேண்டி போராடுவேன் என்று மெகபூபா முப்தி கூறியது குறிப்பிடத்தக்கது.