பீகார் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி போட்டியின்றி தேர்வு..

 

பீகார் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி போட்டியின்றி தேர்வு..

பீகார் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மறைந்ததையடுத்து அவர் வகித்த மாநிலங்களவை எம்.பி. பதவி காலியானது. இதற்கான இடைத்தேர்தல் வரும் 14ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்.

பீகார் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி போட்டியின்றி தேர்வு..
சுஷில் குமார் மோடி

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால் இந்த மாநிலங்களவை தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர்தான் வெற்றி பெறுவார். ஆகையால் இந்த தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து எதிர்க்கட்சிகள் யாரும் வேட்பாளரை நிறுத்தவில்லை. இருப்பினும் சுயேட்சை உறுப்பினர் ஷ்யாம் நந்தன் பிரசாத் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பீகார் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி போட்டியின்றி தேர்வு..
வெற்றி சான்றிதழ் பெறும் சுஷில் குமார் மோடி

இருப்பினும் அவரது வேட்புமனு ஆய்வின்போது நிராகரிக்கப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் குறைந்தபட்சம் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும். பிரசாத் தாக்கல் செய்த மனுவில் அது இல்லாததால் அவரது வேட்புமனுவை நிராகரித்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுஷில் குமார் மோடி மட்டுமே வேட்பாளராக களத்தில் இருந்தார். இதனையடுத்து வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான நேற்று சுஷில் குமார் மோடி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர்கள் முன்னிலையில் சுஷில் குமார் மோடி மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்.நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு பீகார் பா.ஜ.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.