Home சினிமா யாரு ஓவியா... யாரு ஜூலி... யாரு கவின்... யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

யாரு ஓவியா… யாரு ஜூலி… யாரு கவின்… யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

உற்சாகமாகத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் 4. சென்ற வருடம் அக்டோபர் மாதம் 6-ம் தேதி பிக்பாஸ் 3 முடிந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் முகேன் டைட்டில் வின்னரானார். அதற்கடுத்து இதோ… அதோ என்று தள்ளிப்போடப்பட்ட பிக்பாஸ் 4 நேற்று வண்ணமயமாகத் தொடங்கி விட்டது.

முறுக்கிய மீசையோடு வெல்கம் சொன்னார் கமல்ஹாசன். நான்காம் சீசனிலும் இவரே ’உங்களில் நான்’ என்று நிகழ்ச்சியை வழி நடத்த விருக்கிறார்.

வழக்கம்போல வீட்டை அறிமுகப்படுத்தில் இருந்து தொடங்கியது பிக்பாஸ் 4. சென்ற சீசனோடு ஒப்பிடுகையில் இந்த முறை கலர்ஃபுல் லைட்டிங்கில் அசத்தியிருந்தனர். ஆனால், எங்கும்பச்சை வண்ணம் தூக்கலாக இருந்தது. ஏதாச்சும் குறியீடா (பிக்) பாஸ்!

சமையல் செய்ய விருக்கும் ஸ்டவ்-இல் நான்கு பர்னர்களில் இரண்டுதான் எரியுமாம்… இரண்டு பெட்ரூம் செக்‌ஷனில் ஒன்று லாக் பண்ண பட்டிருக்குமாம்… அதைக்கூட விடுங்க… இத்தனை பேருக்கு ஒரே பாத்ரூம் ஒரே டாய்லெட்தானாம்… கமல் அவருக்கே உரிய பாணியில் இதெல்லாம் ஆரோக்கியம் கெடுக்கிற மாதிரி இருக்கே பாஸ் என இடித்துரைத்தார்.

இந்த சீசனிலும் நீச்சல் குளத்தில் தண்ணீர் இல்லை. பாதுகாப்பு கருதி, மேல் வளையால் மூடியிருக்கிறார்கள். இதில்தான் முதல் சீசனில் ஓவியா தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாக வதந்தி பரவியது (அது வதந்திதானே பாஸ்?)

நோ அவுட்கோயிங்… ஒன்லி இன்கம்மிங் என 2000 –ல் நாம் செல்போனைப் பயன்படுத்தியதுபோல ஒரு டெலிபோன் வைத்திருக்கிறார் பிக்பாஸ்.

இந்த சீசனில் ஜெயில் கம்பி கிடையாது. சுற்றிலும் கண்ணாடிகள்தாம். இங்கேருந்து யாரும் கல்லெடுத்து எறிய முடியாது என கமெண்ட் அடித்தார் கமல். கல்லெறிய முடியாது சாரே… சொல்லெறிய முடியும்ல.

பிக்பாஸ் வீட்டை ஒரு மூச்சில் சிம்பிளாகச் சுற்றிக்காட்டிவிட்டு மேடைக்கு விரைந்தார் கமல். இதைத்தானே இன்னும் நூறு நாள் பார்க்க போறீங்க… அப்பறம் என்னாத்துக்கு விளக்க வேண்டியிருக்கு என நினைத்திருக்கலாம்.

நீலநிற நியான் ஒளியால் நிறைந்திருக்க ஸ்கிரின் விலக, பின்னணியில் 4 என்பதாக விளக்குகள் செட் செய்யப்படிருக்க… இரு கைகளையும் விரித்தப்படி, உற்சாகமாக வந்தார் கமல்ஹாசன்.  நியூ நார்மலுக்கு ஒரு விளக்கம் சொன்னார். ’முன் எச்சரிக்கையா இருங்க’ என்பதுதான் அதன் சுருக்கம்.  ஆடியன்ஸ் நேரடியாக வராமல் வெர்ச்சுலாக இணைந்திருந்தார்கள். இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

போட்டியில் கலந்துகொள்பவர்களை அறிமுகப்படுத்தும் முன், பெருவிழா ஒன்று இருப்பதாகச் சொன்னார். உண்மையில் அது முக்கியமான விழாதான்.  கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றிய / பணியாற்றி வருபவர்களோடு சிறு உரையாடலை நடத்தினார் கமல்.

முதலில் வந்தது மேற்கு மாம்பலம் போலிஸ் ஸ்டேசனில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி, கொரோனாவால் இறந்த பாலமுரளியின் மனைவி கவிதா. அவரைப் பற்றிய நிறைய செய்திகள் ஏற்கெனவே நாம் படித்திருப்போம். அவரைப் பற்றி நினைவுகூர்கையில் அழுதுவிட்டார் அவரின் மனைவி கவிதா.

செவிலியர் மலர்விழி, துப்புறவு பணியாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் என தனித்தனியே தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். உடல்களை நல்லடக்கம் செய்பவர் பேசுகையில் ’தாங்கள் 7 பேர் எங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டோம். 500 க்கும் மேற்பட்டோரை அடக்கம் செய்திருக்கிறோம்’ என்ற போது உடலை அதிரச் செய்தது. கைக்கூப்பி நன்றி சொன்னார் கமல்.

போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் பகுதி தொடங்கியது. ‘எல்லோரின் பட்டியலிலும் இடம்பிடித்தவரையே முதல்ல கூப்பிட்டு விடலாம்’ என்றதும், ’தர்பார்’ பாடல் ஒலிக்க, இளம்பெண்களோடு ஆடிக்கொண்டே எண்ட்ரி கொடுத்தார் ரியோ. கமல் சொன்னதுபோலவே கிட்டத்தட்ட எல்லோரின் பட்டியலில் ரியோ இருந்தது உண்மைதான்.

தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கும் விதமாக தூரத்தில் நின்றே கைக்கூப்பி வரவேற்றார் கமல். இந்த வருஷம் கட்டிபிடி வெல்கம் கிடையாதுபோல. ரியோ மனைவி ஸ்ருதியிடம் அவரின் வயதைத் தயங்கியபடிகே கேட்க, கேட்பது உலகநாயகனாச்சே என்று ‘26’ என்று சொல்லிவிட்டார். உங்களுக்கு முன்பே நான் ஸ்ருதி எனப் பெயர் வைத்துவிட்டேன் என்றார் கமல். இதன்மூலம் ஸ்ருதி ஹாசனின் வயதை உடைத்துவிட்டார் எனச் சிலர் நினைக்கலாம். அதனால் என்ன… ஸ்ருதிஹாசனின் திறமைதானே ஸ்ருதியைப் பலருக்கும் பிடிக்க வைக்கிறது.

ரியோவின் ப்ளஸ், மைனஸ் எல்லாம் ஸ்ருதி சொல்ல, அதெல்லாம் சொல்லாதீங்க… என்று எச்சரிக்கை கொடுத்தார் கமல். பூச்செடி கொடுத்து வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ரியோ முதன்நாள் ஸ்கூலுக்குப் போன குழந்தைபோல திருதிருவென முழித்தார். ‘அடுத்த ஆளைச் சீக்கிரமா அனுப்புங்க’ என்று கேமராவிடம் சொல்லிக்கொண்டிருந்தவர், வளையால் மூடப்பட்ட நீச்சல் குளத்தைப் பார்த்து, ‘இந்த சீசனிலும் தண்ணீ இல்லையா?” என்று ஜெர்க் ஆனார்.

பிக்பாஸ் பற்றி நிறைய விமர்சனம் என்று கமல் அறிமுகப்படுத்திய நடிகை ஷனம் ஷெட்டி. தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தாலும் இந்தப் படத்தில் நடித்தவர் எனச் சுட்டிக்காட்டும் விதமாக இன்னும் ஒரு படமும் அமையவில்லை. மேடைக்கு வந்த ஷனம் ஷெட்டியிடம் அவரின் உடல்நலம் பற்றி கமல் விசாரித்தபோது நெகிழ்ந்துவிட்டார் ஷனம். ‘உங்களைப் பற்றி பாட்டெல்லாம் பாடியிருக்கிறேன்’ எனச் சொல்லி ஓரிரு வரிகள் பாடிக்காட்டி இன்ப அதிர்ச்சி அளித்தார். ஒரு விஷயம்… ஒரு விஷயம் என தயங்கிக்கொண்டே நீளமாக விளக்கி கமலைப் பாராட்டினார்.

மூன்றாவதாக வந்தவர் புன்னகை மன்னனின் கமல் ஜோடி ரேகா வந்தார். இவரின் பெயரும் பலரின் பட்டியலில் இருந்தது. ”நூறு பேர் ’போ’னு சொன்னாங்க… நூறு பேர் ‘போகாதீங்க’னு சொன்னாங்க” என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார் ரேகா. ’வீட்டுக்காரரே போகச் சொல்லிட்டார். அப்பறம் என்ன வந்துட்டேன்’ என்று ரேகாவுக்கு அமெரிக்காவில் படிக்கும் அவரின் மகள் சர்ப்பரைஸ் வாழ்த்துச் சொனார். (அடுத்த ஹீரோயினாகக் களம் இறங்கலாம்) நடிகை ஊர்வசியும் வாழ்த்துச் சொல்ல வீட்டுக்குள் நுழைந்தார்.

’நான் பேசறது காண்டவர்ஸியாகலாம்’ என்று வீடியோவிலேயே சொன்னார் பிட்னெஸ் பாலாஜி. ‘இவர் மேல புல் போக்கஸ் வைக்கணும் என நினைத்திருப்பார் பிக்பாஸ். இல்லையா பின்ன… கண்டண்ட் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ’மிஸ்டர் பர்ஃபெக்ட் பாடி’ பட்டம் உள்பட பல விருதுகளைப் பெற்றவர் பாலாஜி. இன்னும் கவனம் பெற வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன் என்றார். உள்ளே நுழைந்த பாலாவை ஷனம், ரேகா உற்சாகமாக வரவேற்றனர். ஜிம் பகுதியைப் பார்த்து குஷியாவிட்டார் பாலாஜி.

அடுத்து, அனிதா சம்பத். அவரின் அப்பாவைப் பற்றியும் தமிழ் பற்றியும் கணவர் பற்றியும் அழகான வீடியோ அனிதா சம்பத்க்கு எடுத்திருந்தார்கள். ’விஜயகாந்த் படத்து டயலாக் பேப்பரைக் கொடுத்தது போல ‘அதிகார துஷ்பிரயேகத்துக்கு எதிராகப் போராடுவேன்’ என்று சீரியஸாகப் பேசினார். வந்தவுடனே கமலைப் புகழ்ந்துதள்ள, பதில் வணக்கமாக அவரும் புகழ்ந்தார். ’செய்திகளை எமோஷனல் இல்லாமல் படித்து பார்த்திருக்கிறார்கள். இனி பிக்பாஸ் வீட்டில் எமோஷனாகப் பார்ப்பார்கள்’ என்றது அழகு. மீண்டும் கமல் புராணத்திற்கு அனிதா வண்டியைத் திருப்பினார். ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகம் அறிமுகப்படுத்த போவதாக கமல் அறிவித்தார். நல்ல விஷயம். இடையில் ஓடிடி பிரச்னைக்கு தன் ஆதரவை அறிவித்தார்.

அசத்தலான பாடலோடு வந்தார் இன்ஸ்டாகிராம் புகழ் ஷிவானி. வாழ்த்து சொல்லும் வீடியோவிலேயே அவரின் அம்மா அழுதுவிட்டார். ஷிவானியும் அதேபோல இருந்தால் நிச்சயம் பிக்பாஸில் கண்ணீர் காட்சிகள் நிறைய இருக்கும். ஒரு சாயலில் சென்ற சீசன் லாஸ்லியாவை நினைவூட்டுகிறார். (கவின் யாருப்பா?)

 கோட்சூட், ட்ரிம் தாடியுடன் ஜித்தன் ரமேஷ் வந்தார். படத்தில் பார்ப்பதை விடவும் ஸ்மார்ட்டாக இருந்தார். ’நியூ நார்மலில் நீதான் சேஃபாக இருக்கப்போற’ என்று வித்தியாசமாக வாழ்த்தினார் சகோதரர் நடிகர் ஜீவா.

’ஒத்த சொல்லால…. ‘ என அதிரடியாகப் பாடியப்படியே வந்தார் பாடகர் வேல்முருகன். ’நிறைய எண்டர்டெயின்மெண்ட் காத்திருக்கு’ என வேல்முருகனைப் பற்றிச் சொல்ல, அவர் பதிலுக்கு கமலைப் பாராட்டி ‘பாட்டாக’வே பாடிட்டார். முதல் சீசனின் கஞ்சா கருப்பா… சென்ற சீசன் பொன்னம்பலமா? என்பது போகப்போகத்தான் தெரிய வரும்.

அழகான வீடியோவுக்குப் பிறகு வந்த ’நெடுஞ்சாலை’ ஆரி நிதானமாகப் பேசினார். ’மரபணு’ பற்றிப் பேசுங்க என்று கமல் எடுத்துக்கொடுக்க, இதற்காகத்தானே காத்திருந்தேன் என ஸ்கூல் பையன் மாதிரி சொன்னார் ஆரி.

பலவகை மல்யுத்தங்கள் கலந்த எம்.எம்.ஏ விளையாட்டு வீரர் சோமசேகர் அடுத்த போட்டியாளராக வந்து இணைந்தார். சினிமா, இசை, தொலைக்காட்சி, சோஷியல் மீடியா புகழ் என்றில்லால் விளையாட்டுத் துறை சார்ந்த ஒருவர் வந்திருக்கிறாரே என்று நினைத்தால், விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன் என்றார். அனேகமாக இரண்டாம் சீசனில் வந்த கணேஷ் போலிருப்பார் என நினைக்கிறேன்.

டான்ஸ் ஷோக்களில் பிரபலமான கேப்ரில்லா அடுத்த போட்டியாளராக வந்தார். ’ஏன் இந்த நிகழ்ச்சியில் வந்தீர்கள்?’ எனக் கமல் கேட்டதும், பேட்டியில் பதில் அளிப்பதுபோல நிதானமாகப் பதில் சொன்னார். வீட்டுக்குள் நுழைந்த கேப்ரில்லாவை வேல்முருகன் உள்ளிட்டோர் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். சின்ன வயது ஐஸ்வர்யா (பிக்பாஸ்) வை நினைவூட்டுகிறார்.

’பிக் பாஸ்க்குப் போக மாட்டேன்… போக மாட்டேன்’ என பத்து நிகழ்ச்சிகளில் நிஷா சொல்லும்போதே நிச்சயம் போவார் என்று கணிக்கப்பட்டவர். கணிப்பைப் பொய்யாக்காமல் வந்தார். கஜா புயலில் நிஷா உதவியதைப் பற்றி கமல் கேட்க, நிஷாவின் உதவிசெய்யும் முகம் வெளிப்பட்டது. கமலிடமே மய்யம் விளிம்பு என குறியீட்டு மொழியில் பேசிய நிஷா உற்சாகமாக வீட்டுக்குள் சென்றார். வீட்டில் உள்ளவர்களை லேசாகக் கலாய்த்தார்.

எல்லோரின் பட்டியலில் முதல் பெயராக இருந்தவர் ரம்யா பாண்டியன். அசத்தலான டான்ஸோடு எண்ட்ரி கொடுத்தார் ரம்யா. (பாட்டு முடிவதற்குள் சோஷியல் மீடியாவில் ரம்யா பாண்டியன் ஆர்மியை தூசி தட்டி எடுத்துவிட்டார்கள்) இரண்டு வாரம் குவாரண்டைன் இருந்தது பற்றி பேசிக்கொண்டார்கள் கமலும் ரம்யா பாண்டியனும்.

’வண்ணநிலவே வா… வசந்த முல்லையே வா’ ரம்யா பாண்டியனை வேல் முருகன் வரவேற்க, ‘எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு’ எனக் கைக்கட்டினார் ஆரி. ‘எனக்குக்கூட ஒரு தடவை கல்யாணம் ஆகிடுச்சு’ என வேல்முருகன் கிச்சு கிச்சு மூட்ட நினைக்க, ‘கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதே’னு சந்தானம் டயலாக்தான் நினைவுக்கு வந்தது.

மிஸ் சென்னை பட்டம் வென்ற சம்யுக்தாவின் வீடியோ அழகாக இருந்தது. அவரின் நான்கு வயது சுட்டிப் பையன் ரொம்ப க்யூட். நிதானமாகப் பேசுகிறார்;  பிட்னஸ் விரும்பி. அதிரடி காட்சிகள் எதிர்பார்க்கலாம்.

சென்ற சீசன் மோகன் வைத்யா கேரக்டருக்கு 90’ஸ் கிட்ஸ்க்கு நன்கு தெரிந்த சுரேஷ் சக்கரவர்த்தி வந்தார். சொர்ணமுகி படத்தில் பிரகாஷ் ராஜிடனே வரும் கேரக்டரில் நடித்திருப்பார். சமீபத்தில் இவரது சமையல் வீடியோக்கள் பாப்புலரானது. அதனால்தான் செலக்ட் பண்ணியிருப்பீர்களோ…

‘நல்லா டான்ஸ் ஆடுவீர்களே?’ என்று கமல் கேட்க, ‘வரவே வராது என விளக்கிச் சொல்ல கமல் முகம் வாடியது. சமாளித்து ’சமையல் வருதே…’ என்றார். அதுவும் வராது சார் என்றார் விடாபிடியாக. பின்னர் ஒரு ஜோக் (!) அடுத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே கேமராவைப் பார்த்து நாங்கள் செய்யும் தப்பை ஆலந்தூர் ஆண்டவா… (என்றதும் அருகில் இருப்பவர் ஆழ்வார் பேட்டை என்றதும்) சுதாரித்துக்கொண்டு ஆழ்வார் பேட்டை ஆண்டவா பொறுத்தருள வேண்டும் என்றார்.

இறுதிப்போட்டியாளாராக சூப்பர் சிங்கர் ஜீனியரில் டைட்டில் வின் பண்ணிய (ரொம்ப சீசனுக்கு முன், இப்போ பெரிய ஆளா வளர்ந்திட்டார்) ஆஜித் பாடியப்படியே வந்தார். யார் சண்டைக்கும் போக மாட்டேன். தானா சண்டையாக வந்தாலும் போட மாட்டேன் என்பதுபோல இருந்தார். பிக்பாஸில் நீடிக்கிறது இந்தத் தகுதி ஒன்றுபோதுமே…

அனைத்துப் போட்டிகளின் அறிமுகமும் முடிந்தது. லிவிங் ஏரியாவில் போட்டியாளர்களை உட்கார வைத்து ‘சும்மா சிரிச்சு பேசிட்டே இருக்கக்கூடாது. கடைசியில ஒருத்தர்தான் ஜெயிப்பாங்க… அதனால, ஏதாச்சும் வம்பு இழுத்து கண்டண்ட் கொடுங்க’ என்பதை மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் பிக்பாஸ். ‘டிஸ்பஸ்’ சொன்னது கலையும் ஸ்கூல் ஸ்டூடன்ஸைப் போல நீங்கள் செல்லலாம் என பிக்பாஸ் சொன்னதும் கலைந்தனர்.

இன்று மகிழ்ச்சியோடு முடிந்திருக்கிறது. ஆனால், நாளையும் அப்படி முடியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

சோஷியல் மீடியாவில் இவர்களில் கேப்ரில்லாதான் ஓவியா… இல்லை இல்லை ரம்யா பாண்டியன் தான்… இரண்டு பேரும் இல்லை ஷிவானிதான் என மல்லு கட்டி வருகிறார்கள். இன்னும் ஓரிரு வாரத்தில் தெரிந்துவிடும் யார் ஓவியா என்று. அல்லது நிரப்ப முடியாத இடமாக ஓவியா இருக்கப்போகிறதா என்று.

மாவட்ட செய்திகள்

Most Popular

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் எப்படி?

சென்னை வாலாஜாசாலையில் இருக்கும் கலைவாணர் அரங்கில் கடந்த 23ம் தேதி இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் ஓபிஎஸ் 14-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு,...

மோடி நாடு கடத்தல் வழக்கு… நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

மும்பையிலுள்ள பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டவர் நிரவ் மோடி. வைர வியாபாரியான இவர் இந்த மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்குத்...

டாஸ்மாக் கடை அருகே சடலமாக கிடந்த விசைத்தறி தொழிலாளி… போலீசார் விசாரணை…

கோவை கோவை அருகே விசைத்தறி தொழிலாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி...

கனிம வளங்கள் எடுக்க புதிய டெண்டர்… இடைக்கால தடைவிதித்து உத்தரவு!

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனிம வளங்களை எடுப்பதற்கான, புதிய டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, திமுக முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்...
TopTamilNews