தூய்மைப்படுத்தும் தீ: போகிக்கு எதை எரிப்பது?

 

தூய்மைப்படுத்தும் தீ: போகிக்கு எதை எரிப்பது?

போகி பண்டிகை இன்னும் இரண்டு நாளில் வர உள்ளது. தைப் பொங்கலை வரவேற்க வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை வெளியே போட்டு எரிப்பது ஐதீகமாக உள்ளது. தேவையற்றது என்று நாம் போட்டு எரிக்கும் அந்த தீயில் கடந்த கால கசப்பும், கெட்ட அனுபவங்கள், பொறாமை உள்ளிட்ட கெட்ட குணங்களும் எரிக்க வேண்டும்.

நம் முன்னோர்கள் தை 1ம் தேதியை புத்தாண்டாக கருதியிருக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் பலரும் கூறுகின்றனர். அதனால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தையை கொண்டாடினார்கள் என்றும், வருடத்தின் கடைசி நாளான போகியை, பழையன வழிதலும் புதியன புகுதலும் கூறினார்கள் என்றும் சொல்கிறார்கள்.

தூய்மைப்படுத்தும் தீ: போகிக்கு எதை எரிப்பது?

பழையதைக் கழிக்கும் வகையில் அதிகாலையில் எழுந்து பழைய பொருட்களைப் போட்டு தீ வைத்து எரித்து, மேளம் அடித்து நெருப்பைச் சுற்றி வந்து மகிழ்வது தமிழர் வழக்கமாக இருந்து வந்துள்ளது. கான்கிரீட் காடாக மாறிவிட்ட இந்த நாட்களில் இதற்கு எல்லாம் வாய்ப்பில்லை. இன்றைக்கும் பல பெரியவர்களுக்கு தங்கள் இளமைக்கால போகி கொண்டாட்டத்தை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

போகிக்கு முந்தைய நாளே வீட்டில் உள்ள பழைய பொருட்களை சேகரித்து வைத்துவிடுங்கள். பழைய கிழிந்த பாய், முறம், துடைப்பம், கிழிந்த போர்வை, பயன்படுத்த முடியாத உடை உள்ளிட்ட பொருட்களை போட்டு எரிக்கலாம்.

கிழிந்த உடைகளை வேறு யாருக்காவது கொடுக்கலாமே என்ற எண்ணம் வரலாம். கிழிந்த துணியை மற்றவர்களுக்கு வழங்குவது தரித்திரம். அதற்கு பதில் நல்ல துணியை, புதுத்துணியாக வாங்கிக் கொடுப்பதே சிறந்தது. பழைய துணியை கொடுக்க, எரிக்க மனம் இல்லை என்று வீட்டிலேயே சேர்த்து வைக்காதீர்கள். அது வீட்டுக்கு தரித்திரத்தை கொண்டு வரும்.

போகி நெருப்பில் ரப்பர் செருப்பு, பிளாஸ்டிக் குடம், பக்கெட் போன்றவற்றை தப்பித் தவறியும் போட்டுவிடாதீர்கள். அது காற்றின் மாசை அதிகரிக்கச் செய்வதனுடன், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னைகள் வருவதற்கு வழிவகுத்துவிடும். குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.

சிறுவர்கள் நீண்ட நேரம் போகி நெருப்பு எரிய வேண்டும் என்பதற்காக பழைய டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நெருப்பில் போடுவது தொடர்கிறது. அப்படிச் செய்வதை தடுத்திருங்கள். நெருப்புக்கு அருகில் ஒரு பக்கெட் தண்ணீரை வைத்திருங்கள். அவசர நிலை ஏற்பட்டால் உபயோகமாக இருக்கும்.

போகி கொண்டாடிய பிறகு, தீயில் போட்ட எல்லாம் நன்கு எரிந்த பிறகு நெருப்பை அப்படியே விட்டுச் செல்ல வேண்டாம். தண்ணீர் விட்டு நெருப்பை முற்றிலுமாக அணைத்துவிட்டுச் செல்லுங்கள். பாதுகாப்பான முறையில் போகியைக் கொண்டாடுங்கள்… அனைவருக்கும் போகி வாழ்த்துகள்!