3-வது நாளாக 100 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை… பவானி கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

 

3-வது நாளாக 100 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை… பவானி கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!


ஈரோடு

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை நீடிப்பதால் பவானிசாகர் அணை தொடர்ந்து 3 -வது நாளாக 100 அடியில் நீடித்து வருகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 4,580 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. 105 கொள்ளளவு கொண்ட இந்த அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் வழியாக திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 2.07 லட்சம் ஏக்கர் நிலமும், பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீர் மூலம் தடப்பள்ளி -அரக்கன்கோட்டை, காலிங்கராயன் கால்வாய்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

பவானிசாகர் அணைக்கு, நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் நீர் வரத்து ஆதாரங்களாக உள்ளன. மேலும், கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீரும் முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த 25ஆம் தேதி மாலை 29-வது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது.

3-வது நாளாக 100 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை… பவானி கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 234 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், பவானி ஆற்றில் 4,580 கனஅடியும் திறந்து விடப்படுகிறது. தற்போது திறக்கப்படும் உபரிநீர் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும்போது, பவானி ஆற்றின் மேல் மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பவானி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.