புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் கறிவேப்பிலை!

 

புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் கறிவேப்பிலை!

இந்திய உணவு வகைகளில் கறிவேப்பிலைக்கு முக்கிய இடம் உண்டு. அதை சாப்பிடுகிறோமோ இல்லையோ, தாளிக்கும்போது ஐந்தாறு இலைகளை போடுவதும், சாப்பாட்டில் அதை அப்படியே ஓரங்கட்டி வைப்பதும் வழக்கமாக வைத்திருக்கிறோம்.

உண்மையில் கறிவேப்பிலை ஊட்டச்சத்து சுரங்கம் என்று சொல்லலாம். உடல் எடை குறைப்பு முதல் புற்றுநோய் செல்கள் அழிப்பு வரை கறிவேப்பிலையின் பயன்பாடு அளப்பரியது.

புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் கறிவேப்பிலை!

முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

கறிவேப்பிலையில் உள்ள நுண் ஊட்டச்சத்து முடியின் அடிப்பகுதியான ஃபாலிக்கிள்ஸை தூண்டி முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. மேலும், முடி கருகருவென நீண்டு வளர துணை செய்கிறது. முடி உதிர்வு, முடி பிளவு உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள் தினமும் கறிவேப்பிலையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடல் எடை குறைப்பு

கறிவேப்பிலையில் கார்பசோல் அல்க்லைட்ஸ் என்ற ரசாயனம் உள்ளது. இது உடலில் கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் கறிவேப்பிலையைக் கைப்பிடி அளவுக்கு சாப்பிட்டு வந்தால் அது உடல் எடை குறைக்க, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது

உடலில் கொலஸ்டிரால், டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பதன் காரணமாக இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய் வருகிறது. கறிவேப்பிலை கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

புற்றுநோய் செல்களை அழிக்கிறது

கறிவேப்பிலையில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ரசாயனம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. புற்றுநோய் செல்களுக்கு எதிராக கறிவேப்பிலை செயல்படுமா என்று மலேசியாவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. புற்றுநோய் செல்கள் மீது கறிவேப்பிலையில் இருந்து எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட சாறு செலுத்தப்பட்டது. இதில் புற்றுநோய் செல்கள் அழிப்பதையும், சில வகையான புற்றுநோய் செல்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அது பரவாமல் தடுக்கும் செயலையும் செய்வதை கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள girinimbine என்ற ரசாயனம் வயிறு இரைப்பையில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கும் வகையில் உள்ளது. எனவே, புற்றுநோய் செல்களுக்கு எதிரான மிக ஆற்றல் மிக்க உணவாக கறிவேப்பிலை உள்ளது.

சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது

கறிவேப்பிலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். கணையத்தில் உள்ள லாங்கர் ஹான்ஸ் திட்டுகளிலிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. இந்த திட்டுக்கள் பாதிப்படைவதைத் தடுக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு. சர்க்கரை வராமல் இருக்க மட்டுமல்ல, சர்க்கரை நோயாளிகளும் கூட தினமும் கறிவேப்பிலையை சாப்பிடலாம்.