இளைஞரிடம் கத்திமுனையில் நகை, பணம் வழிப்பறி- பெங்களூரை சேர்ந்த 4 பேர் கைது

 

இளைஞரிடம் கத்திமுனையில் நகை, பணம் வழிப்பறி- பெங்களூரை சேர்ந்த 4 பேர் கைது

திருநெல்வேலி

நெல்லை அருகே இளைஞரிடம் கத்திமுனையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற பெங்களூரை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சகாயபுரத்தை சேர்ந்தவர் செந்தில்வேல்(31). இவர் நெல்லையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று செந்தில், ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மர்மநபர்கள் செந்தில்வேலை கத்திமுனையில் மிரட்டி, அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயின் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இளைஞரிடம் கத்திமுனையில் நகை, பணம் வழிப்பறி- பெங்களூரை சேர்ந்த 4 பேர் கைது

இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நெல்லை மாநகர துணை காவல் ஆணையர் மகேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த மனோஜ்(27), அபிஷேக்(26), பிரவீன் குமார் மற்றும் ரகுவரன்(31) என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களிடம் இருந்து நகை, பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவர்களுக்கு வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.