மணல் கடத்தலை தடுக்க முயற்சி… விஏஓக்கள், எஸ்ஐ மீது கும்பல் தாக்குதல்… எஸ்கேப்பான 6 பேரை தேடும் போலீஸ்

 

மணல் கடத்தலை தடுக்க முயற்சி… விஏஓக்கள், எஸ்ஐ மீது கும்பல் தாக்குதல்… எஸ்கேப்பான 6 பேரை தேடும் போலீஸ்

மணல் கடத்தலை தடுக்க முயன்ற விஏஓக்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கடத்தல் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ளது மகாதானம் கிராமம். இந்த கிராமத்தின் விஏஓவாக (பொறுப்பு) அருள் அரவிந்தன் பணியாற்றி வருகிறார். கும்பல் ஒன்று அங்குள்ள வயல்களில் மணலை திருடி வருவதாக இவருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற விஏஓ அருள், வயல்வெளிகளில் கலசம்பாடியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் செங்கல் சூளைக்கு மணல் எடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தாசில்தாரருக்கு தகவல் கொடுத்துள்ளார் விஏஓ அருள். இதைத் தொடர்ந்து, அவருக்கு உதவி செய்ய அருகில் உள்ள பாப்பாக்கோயில், செம்பியன் மாதேவி ஆகிய கிராமங்களை சேர்ந்த விஏஓக்கள் வந்துள்ளனர்.

அப்போது, மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதிக்கு சென்றனர். மணல் கடத்தி வந்த டிராக்டர்களை நிறுத்த முயன்றுள்ளனர் விஏஓக்கள். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல், அவர்களுடன் தகராறில் ஈடுபட்டது. இதையடுத்து, வேளாங்கண்ணி காவல்நிலையத்துக்கு விஏஓக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் மட்டும் வந்துள்ளார். அவர் வந்து மணல் கடத்தல் கும்பலை தடுத்துள்ளார். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்போது, தங்கள் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த விஏஓக்களை தாக்கிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்த வேளாங்கண்ணி இன்ஸ்பெக்டர் தலைமையில் காவலர்கள் அந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள், மணல் கடத்தல் கும்பல் பயன்படுத்திய டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, விஏஓக்கள் அளித்த புகாரின் பேரில் கடத்தல் கும்பல் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை தேடி வருகின்றனர்.