×

யாரோ ஊதும் மகுடிக்கு ஆடும் தேர்தல் ஆணையம்; திட்டமிட்டு பழிவாங்கப்படும் டிடிவி தினகரன்!

அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பெயரை கொண்ட சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்துவதை மாற்று கட்சியினர் ஒரு யுக்தியாக கையாண்டு வந்தன சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் பெயரிலேயே சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு அவர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது டிடிவி தினகரனை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கை என பகிரங்கமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அப்போது தேர்தலின் போது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த
 

அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பெயரை கொண்ட சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்துவதை மாற்று கட்சியினர் ஒரு யுக்தியாக கையாண்டு வந்தன

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் பெயரிலேயே சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு அவர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது டிடிவி தினகரனை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கை என பகிரங்கமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அப்போது தேர்தலின் போது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பெயரை கொண்ட சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்துவதை மாற்று கட்சியினர் ஒரு யுக்தியாக கையாண்டு வந்தனர்.  இது குறிப்பிட்ட வேட்பாளருக்கு விழும் வாக்குகளை சிறிதளவு மாற்றலாம், அது நமக்கு ஆதாயத்தை தேடித் தரும் என அவர்கள் நம்பினர்.

அப்போது ஓட்டுச் சீட்டு முறை இருந்தது, எனவே விவரம் தெரியாதவர்கள் வாக்குகளை மாற்றி போட்டனர். ஆனால், தற்போது வாக்கு இயந்திரம் முறை அமலில் உள்ளது. அதில், அங்கீகரிக்கப்பட்ட அரியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர் அகர வரிசைப்படி முதலிலும், அதன் பின்னர் சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறுகிறது. ஆனாலும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பெயரில் சுயேட்சைகளை களமிறக்கும் முறை மட்டும் இன்னும் மாறவில்லை.

அபப்டி நிறுத்தப்படும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு எந்தவித அரசியல் நோக்கமோ பொது எண்ணமோ கிடையாது என்பது வெளிப்படையாக தெரியும் உண்மை. குறிப்பிட்ட பிரபல வேட்பாளருக்கு எதிராகவே இவர்கள் எதிர்க்கட்சிகளால் நிறுத்தப்படுகிறார்கள்.

இந்த யுக்தி காட்டுமன்னார்கோயிலில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அங்கே விசிக தலைவர் திருமாவளவன் தோற்றிருக்கிறார். இந்த வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்குகளை சுயேட்சை வேட்பாளராக நிறுத்தப்பட்ட வேறு திருமாவளவன் வாங்கியிருக்கிறார். அங்கு 87 வாக்கு வித்தியாசத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தோல்வியடைந்தார். ஆனால், அதே தொகுதியில் திருமாவளவன் என்ற சுயேட்சை வேட்பாளர் போட்டியிட்டு 289 வாக்குகளை பெற்றார். கல்வியறிவு, எழுத்தறிவில் மக்கள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில் விவரமறியாமல், பெயர் குழப்படியால் நிகழ்ந்த தோல்வியாக அது பார்க்கப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன போதும், இன்னமும் வேட்பாளர் பெயர்களை வைத்து வாக்காளர்களைக் குழப்ப முடியும் என்றால், இது என்ன ஜனநாயகம், தேர்தல் என பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் பெயரிலேயே சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு அவர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களம் கண்டு அதிரடி காட்டிய டிடிவி தினகரன் மீது அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது. அங்கு தனக்கு வெற்றியை தேடித் தந்த குக்கர் சின்னத்தை ஒதுக்கக கோரி நடைபெற்ற சட்டப் போராட்டத்தில், எதிர்பார்த்தது போலவே அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தேர்தல் ஆணையத்தின் விடாப்படியால், அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அமமுக வேட்பாளர்களை சுயேட்சை வேட்பாளர்களாக கருதி பொது சின்னத்தை ஒதுக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி அவருக்கு பரிசு பெட்டி சென்னம் ஒதுக்கப்பட்டது. எனினும், குக்கர் சின்னத்தை வேறு யாருக்கும் ஒதுக்க கூடாது என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்த போதும், அதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், எதிர்வரவுள்ள இடைத்தேர்தலில் சில தொகுதிகளில் அமமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அதே வேட்பாளர்களின் பெயர்களில் சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கி, அமமுக-வின் பரிசுப் பெட்டி சின்னத்துக்கு அடுத்தபடியாக குக்கர் சின்னத்தை இடம்பெறும் வகையில் ஒதுக்கியுள்ளது.

திருவாரூரில் எஸ்.காமராஜ், பாப்பிரெட்டிபட்டியில் டி.கே.ராஜேந்திரன், அரூரில் ஆர்.முருகன் ஆகியோர் அமமுக சார்பில் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி இவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவர்.

சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக வாக்குபதிவு இயந்திரத்தில் இடம்பெறும். அந்த வகையில், இவர்களது பெயர்களுக்கு கீழே, அதே பெயர்களை கொண்ட சுயேட்சை வேட்பாளர்களை இடம் பெற செய்து அவர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது, டிடிவி தினகரனை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கை என பகிரங்கமான குற்றச்சாட்டுகளை பல்வேறு தரப்பினரும் முன் வைத்து வருகின்றனர்.

இதையும் வாசிங்க

துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து!