×

இந்தோனேசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1,600 ஆக உயர்வு; புது எச்சரிக்கை

ஜகர்தா: இந்தோனேசிய நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திரும்ப பெறப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 6 அடி
 

ஜகர்தா: இந்தோனேசிய நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திரும்ப பெறப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 6 அடி உயரத்திற்கு எழுந்த ஆழிப்பேரலையால் கடலோர பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, பாலு மற்றும் டோங்க்லா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, அங்கு மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுனாமி தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பாலு நகர மக்களுக்கு நோய்த்தொற்று மற்றும் மாசு உருவாகும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அந்நகரத்தில் இன்னும் சடலங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அத்தகைய சடலங்கள் மீட்புக் குழுவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. மாசு ஏற்படாமல் அந்த உடல்களை அகற்ற வேண்டும். நாங்கள் எங்கள் குழுவினருக்கு தடுப்பூசிகளைச் செலுத்தி இருக்கிறோம். இருப்பினும் மாசு ஏற்படலாம். இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.