×

உலக புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது

 

உலக புகழ்பெற்ற  ஹாங்காங் ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜம்போ கப்பல் உணவகம் ஹாங்காங்கில் அடையாளங்களின் ஒன்றாக திகழ்ந்தது. 1976ம் ஆண்டில் சேவையை தொடங்கிய ஜம்போ கப்பல் பார்ப்பதற்கு அரண்மனை தோற்றம் கொண்டது. பிரிட்டிஷ் ராணி எலிசபத் முதல் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் வரை பல பிரபலங்கள் இந்த கப்பல் உணவகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அந்த அளவுக்கு புகழ்பெற்ற இந்த கப்பல் உணவகம் கொரோனா காரணமாக பெரும் நிதிச்சுமைக்கு ஆளானது. கொரோனாவால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் பயணத்தடை காரணமாக ஜம்போ கப்பல் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரும் கூட கப்பல் உணவகத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் அதன் சேவையை முழுவதுமாக நிறுத்த அதன் உரிமையாளர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த 2 ஆண்டகளாக அந்த நிறுவனம் சேவையை நிறுத்தியது.

இந்நிலையில், தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக அதன் முதன்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. தண்ணீர் உள்ளே நுழைய தொடங்கியவுடன் கப்பலை மீட்க முயற்சித்தும் மீட்கமுடியவில்லை என்றும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. கப்பல் மூழ்க தொடங்கியவுடன் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கிய சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.