×

"இவர்களுக்கு ஒமைக்ரான் எப்போதும் ஆபத்து தான்" - WHO எச்சரிக்கை!

 

உலகிலுள்ள 150க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் பரவியுள்ளது. ஏற்கெனவே உலகம் முழுவதும் வியாபித்து, சற்று உக்கிரத்தை குறைத்திருந்த டெல்டாவை ஒமைக்ரான் உசுப்பிவிட்டுள்ளது. இதனால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து தாண்டவமாடுகிறது டெல்டா. டெல்டாவும் ஒமைக்ரானும் ஒருசேர பரவுவதால் தொற்று எண்ணிக்கை மளமளவென எகிறிக் கொண்டிருக்கிறது. இப்படியே போனால் இன்னும் சில வாரங்களில் உலக நாடுகளின் சுகாதார உட்கட்டமைப்பு ஆட்டம் காணும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

எண்ணிக்கையைக் கண்டு அதிர்ந்துபோனாலும் ஒமைக்ரான் அவ்வளவாக பெரிய பாதிப்பை உண்டாக்குவதில்லை என சொல்லப்படுகிறது. முதன்முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் மற்ற கொரோனா அலைகளை விட ஒமைக்ரானால் ஏற்பட்ட அலை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர், ஆக்சிஜன் தேவைப்படுவோர் விகிதங்கள் மிகக் குறைவாகவே இருந்தது என அந்நாட்டு நிபுணர்கள் கூறினர். அபாயகரமான டெல்டாவை விட வேகமாகப் பரவினாலும், 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களை தாக்கினாலும் 3 நாட்களில் ஓடி விடுகிறது ஒமைக்ரான். 

இதற்கு இரு வித கருத்துகள் சொல்லப்படுகின்றன. ஒமைக்ரான் உருமாறும்போது செல்லில் ஏற்பட்ட ஏதோ ஒரு மாற்றம் அதன் வீரியத்தைக் குறைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இல்லை இல்லை தடுப்பூசி செலுத்தியதால் தான் வேகமாகப் பரவினாலும் வீரியம் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் ஒமைக்ரான் தடுப்பூசி போடாதவர்களை அதிகமாக பாதிக்கிறது என்பதே உண்மை. உதாரணமாக மகாராஷ்டிராவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் 96% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இவர்கள் அனைவருமே தடுப்பூசி செலுத்தாதவர்கள்.

இதேபோன்ற நிலை தான் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது. யார் யாரெல்லாம் தடுப்பூசி செலுத்தவில்லையோ அவர்களை தான் ஒமைக்ரான் மருத்துவமனைக்கு ஓட வைக்கிறது. மற்றவர்களோ வீட்டிலிருந்தபடியே ஒமைக்ரானை விரட்டி விடுகிறார்கள். இதையே தான் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோமும் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், "டெல்டாவை விட ஒமைக்ரான் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவு தான். இருந்தபோதிலும் ஒமைக்ரான் ஆபத்தான வைரஸ் தான். குறிப்பாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அது மிகவும் ஆபத்தான வைரஸ் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்றார்.