×

"தன் வினை தன்னை சுடும்"... வேக்சினுக்கு எதிராக பிரச்சாரம் செய்த எம்பி கொரோனாவுக்கு பலி!

 

"தன் வினை தன்னை சுடும்" என்பார்கள். எம்பியாக இருந்தவருக்கு அந்தப் பழமொழி மிகச் சரியாக பொருந்தியிருக்கிறது. ஆம் பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஸ் எவ்ரார்டு தான் அவர். வலசாரி சித்தாந்தம் கொண்ட கட்சியைச் சேர்ந்தவர். வலதுசாரி என்றால் பழமைவாதம், தேசியவாதம், பாரம்பரியம் என்பதை பேசிக்கொண்டிருப்பவர்கள். சுருக்கமாக சொன்னால் "நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை” என்று சொல்பவர்கள். பாரம்பரியத்தை பேசி பேசி நவீனத்தை ஏற்க மறுப்பார்கள். 

அப்படி தான் இவர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை மிகக் கடுமையாக எதிர்த்தார். கொரோனா தடுப்பூசினால் கேடு, அதனால் ஒரு பயனும் இல்லை என நாட்டு மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் அவர் பேச்சை யாருமே கேட்கவில்லை என்பது தனி விஷயம். இவ்வாறு பிரச்சாரம் செய்த அவர் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளவில்லை. தன் குடும்ப உறுப்பினர்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அவர் அனுமதிக்கவில்லை. குறிப்பாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து ஆராய அரசு குழுவை அமைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார்.

இவ்வாறு தொடர்ச்சியாக தடுப்பூசிக்கு எதிராக பரப்புரை மேற்கொண்ட ஜோஸ் எவ்ரார்டுக்கும் கொரோனா பாடம் புகட்டியுள்ளது. ஆனால் அந்த பாடத்தைப் படிக்க இன்று அவர் உயிரோடு இல்லை. காரணம் அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளததால், அவரின் உடல் கொரோனாவின் தீவிரத்தை எதிர்த்து போராட முடியவில்லை. முடிவில் மரணத்தை தழுவியிருக்கிறார். அவருக்கு வயது 74. இவரது மறைவுக்கு அந்நாட்டு அதிபர் மக்ரோன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜோஸ் எவ்ரார்டின் மறைவு, தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்களுக்கு பாடமாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.