×

ஒரே மாதத்தில் 1 கோடி பேருக்கு தொற்று... அமெரிக்காவை சுழன்று அடிக்கும் "ஒமைக்ரான்" சுனாமி!

 

ஒமைக்ரான் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவிய பின்னர், கொரோனா சுனாமி நம்மை தாக்க போகிறது என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அந்த அமைப்பு சொன்னது உலகம் முழுவதும் நடந்ததோ இல்லையோ அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நிகழ்ந்துவிட்டது. இந்தியாவின் நிலை கூட ஓரளவு பரவாயில்லை என சொல்லிவிடும் அளவிற்கு அமெரிக்காவில் சுனாமி பேரலையாக கொரோனா ஆர்ப்பரித்த்து எழுந்துள்ளது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவாக கடந்த வாரம் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஒமைக்ரான் வருவதற்கு முன்பாகவே அங்கே தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கிவிட்டது. நியூயார்க்கின் நிலை மிக மோசமாகியது. ஏனெனில் டெல்டா கொரோனா ஏற்கெனவே அமெரிக்காவை ஆட்டிப்படைத்தது. இச்சூழலில் ஒமைக்ரானும் சேர்ந்துகொள்ள அசால்ட்டாக தினசரி 4 லட்சத்தை தாண்டி சென்றது கொரோனா பாதிப்பு. அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6 கோடியே 62 ஆயிரத்து 77ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு 8 லட்சத்து 37ஆயிரத்து 504ஆக உயர்ந்துள்ளது.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை எட்டியது. கடந்தாண்டு தொடக்கத்தில் 2 கோடியை தொட்டது. மார்ச்ச்சில் 3 கோடியை எட்ட, கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவந்தது. இதன் காரணமாக 6 மாதங்கள் கழித்து செப்டம்பர் மாதம் தான் 4 கோடியை தொட்டது. டிசம்பர் 13ஆம் தேதி 5 கோடியைக் கடந்தது. நேற்று 6 கோடியை தொட்டிருக்கிறது. அதாவது ஒரே மாதத்தில் 1 கோடி பேர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒமைக்ரான் தான் காரணமாக சொல்லப்படுகிறது.