×

அடக்கொடுமையே... ஒரே நாளில் 10 லட்சம் கேஸ் - அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா சுனாமி!

 

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி உலக நாடுகள் முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவிவிட்டது. அபாயகரமான டெல்டாவை விட 10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது ஒமைக்ரான். வேகமாகப் பரவினாலும் லேசான பாதிப்பை தான் ஒமைக்ரான் ஏற்படுத்துவதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இருந்தாலும் டெல்டாவுடன் சேர்ந்து இதுவும் சேர்ந்து பரவுவதால் ஆபத்தானதாக மாறாலாம் என சொல்லப்படுகிறது. அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தான் டெல்டாவும் ஒமைக்ரானும் சேர்ந்து தாக்குகின்றன. 

பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இரட்டிப்படைந்ததால் உலகளவில் 11% அளவிற்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. உலக நாடுகளிலேயே அமெரிக்காவின் நிலை தான் மிக மோசமாக மாறியுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி 5 லட்சத்து 43 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக டெல்டாவை ஓரங்கட்டி ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவுகிறது. அங்கு பரவுவதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று தான் உறுதி செய்யப்படுகிறது. இவை தவிர டெல்டா, ஒமைக்ரான் ஆகியவற்றின் இரு குணங்களையும் இணைத்து 'டெல்மைக்ரான்' என்ற புதிய உருமாறிய வைரஸ் பரவுகிறது.

2022ஆம் ஆண்டை இது தான் ரூல் செய்யப் போகிறது என்கிறார்கள். அதேபோல முன்பை விட தற்போது தான் சிறுவர்கள் கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இச்சூழலில் அமெரிக்காவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் (ஜன.3) 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  10 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை உலகில் வேறு எந்த நாடும் இந்த அளவிற்கு பாதிக்கப்படவில்லை.

இந்தியாவில் 2ஆம் அலையில் கூட உச்சபட்சமாக 4.5 லட்சம் பேருக்கு மட்டுமே தினசரி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் நிலை தான் மிகவும் கவலையளிக்கும் விதமாக மாறியுள்ளது. ஆனால் 10 லட்சம் எல்லாம் சாதாரணம். அரசு அறிவித்திருப்பதை விட அங்கு அதிகமாக தான் தொற்று எண்ணிக்கை இருக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால் அங்கு ஏராளமான மக்கள் அறிகுறிகள் வந்திருப்பதால் மருத்துவமனைக்குக்கே செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். அமெரிக்கா மீண்டு வர உலக நாடுகள் பிரார்த்திக்கின்றன.