×

பெற்றோருக்கு ஷாக் நியூஸ்... குழந்தைகள் தான் ஒமைக்ரான் டார்கெட்? - எச்சரிக்கையா இருங்க! 

 

ஒமைக்ரான் எனும் புதிய கொரோனா தொற்று புரியாத புதிராகவே இருக்கிறது. மிக வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக இதுவரை உருவானதிலேயே அபாயகரமான கொரோனா என்றால் அது டெல்டா தான். அதை விட மின்னல் வேகத்தில் பரவுகிறது ஒமைக்ரான். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களையும் தாக்குகிறது. ஆனால் லேசான பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெல்டாவை போல் நுரையீரல் செல்களை ஒமைக்ரான் தாக்குவதில்லை. இதனால் வீட்டில் தனிமையிலிருந்தாலே போதும். ஒமைக்ரான் பாதிப்பை அடுத்து மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

இருந்தாலும் பெற்றோர்களுக்கு ஒரு ஷாக் கொடுத்திருக்கிறது ஒமைக்ரான். ஒமைக்ரான் முதன்முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. குறிப்பாக குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கான பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்நாட்டு நிபுணர்கள் கூறினர். 10 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் அதிகமாக பரவுகிறது எனவும் மருத்துவமனைகளில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பேர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

கிட்டத்தட்ட இதே மாதிரியான பாதிப்பு அமெரிக்க குழந்தைகளுக்கும் ஏற்படுவதாக அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது. அங்கே நியூயார்க் மாகாணத்தில் 18 வயதுக்குக் குறைவானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது 4 மடங்கு உயர்ந்துள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் என்பது தான் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் ஒமைக்ரான் தாக்குகிறதா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆகவே தடுப்பூ செலுத்தாத பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கும் ஒமைக்ரான் பரவுவதால், பெற்றோர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளை குறிவைத்து ஒமைக்ரான் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து கண்டறிய விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வந்த எந்த உருமாறிய வைரஸ்களும் குழந்தைகளை இந்தளவிற்கு பாதிக்கவில்லை. அதனால் தான் பெரும்பாலான நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாமல் தாமதப்படுத்தி வருகின்றன. ஆனால் ஒமைக்ரான் அந்த முடிவை மாற்றும் என தெரிகிறது.