"WAIT AND SEE... விடவே மாட்டேன்! நிறைய வரி போடுவேன்”- இந்தியாவை மிரட்டும் ட்ரம்ப்
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி, இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நேற்று மேலும் 25 சதவீதம் வரி விதிப்பை அறிவித்தார். இதனால் இந்தியப் பொருட்களின் மீதான வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியால் இந்திய வர்த்தகம் பாதிக்கப்படும் என அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில், “ரஷியாவிடம் மற்ற நாடுகளும் எண்ணெய் வாங்கும் போது இந்தியாவுக்கு மட்டும் குறி ஏன்?" என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அதிபர் ட்ரம்ப், "சில மணி நேரம்தான் ஆகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள். இரண்டாம் கட்ட தடைகளையும் பார்க்கப் போகிறீர்கள். இந்தியா ஒரு நல்ல வர்த்தக தோழராக இல்லை, ஏனென்றால் அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை. எனவே நாங்கள் 25 சதவீதத்தில் முடிவு செய்தோம், ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் நான் அதை கணிசமாக உயர்த்தப் போகிறேன், ஏனெனில் அவர்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குகிறார்கள்” என்றார்.