×

எங்கள் நாட்டு மேயரை கடத்தியது ரஷ்ய படை.. உக்ரைன் பாராளுமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டு..

 


உக்ரைன் மெலிடோபோல் நகர மேயர் இவான் ஃபெடோரோவை ரஷ்ய படைகள் கடத்தி விட்டதாக உக்ரைன் பாராளுமன்றம்  பரபரப்பு தகவலை வெளியுட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின்  தாக்குதல் இன்று 17-வது நாளாக நீடிக்கிறது. பல  நகரங்களை முழுமையாக கைப்பற்றிய ரஷ்ய படைகள்  தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது  ஆக்ரோஷமான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றன. மேலும் உக்ரைனின் மிக முக்கிய அணுமின் நிலையமான செர்னோபில் அணுமின் நிலையமும் தறொபோது  ரஷ்யா கைவசம் சென்றுவிட்டது.

உக்ரைன்  நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும் சொந்த நாட்டை விட்டு வெளியேற முடியாமல் ஏராளமான மக்கள்  உக்ரைனில் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர். உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உணவுக்காக  மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.   ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு பதிலடி கொடுத்து  வருகிறார்கள்.

 இந்நிலையில்,  உக்ரைனில் உள்ள மெலிடோபோல் நகர மேயர் இவான் ஃபெடோரோவை ரஷ்யப் படைகள் கடத்திச் சென்றதாக உக்ரைன் பாராளுமன்றம்  குற்றம் சாட்டியுள்ளது.  இதுகுறித்து உக்ரைன் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,  ரஷ்ய படைகளுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டதால், 10 பேர் கொண்ட குழு மேயர் இவான் ஃபெடோரோவை கடத்திச் சென்றுள்ளது என்றும் தொடர்ந்து  தெற்கு உக்ரைனின் மெலிடோபோல் நகைரை ரஷ்ய  படை ஆக்கிரமித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும்,  இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும்  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,  மெலிடோபோல் மேயர் பிடிபட்டது ஒரு குறிப்பிட்ட நபருக்கு  எதிரானதோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானதோ, உக்ரைனுக்கு எதிரானதோ மட்டுமல்ல. இது ஜனநாயகத்திற்கு எதிரான குற்றம் என்றும்,  ரஷ்ய ராணுவத்தினரின் செயல் ஐஎஸ் பயங்கரவாதிகளின் செயல் போல கருதப்படுவதாகவும் கூறினார்.