3 மாணவர்கள், 3 ஆசிரியர்களை கொடூரமாக கொன்ற 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்
தாய்லாந்தில் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் என மொத்தம் 6 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாங்காக்கிற்கு வடமேற்கே உள்ள நொந்தபுரி மாகாணத்தின் பாங் க்ருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள டெப்சிரின் பள்ளியில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. 14 வயது சிறுவன் தனது தாத்தாவுக்கு சொந்தமான கைத்துப்பாக்கியை கொண்டு, தனது தாத்தா, பாட்டியையும் வீட்டிலேயே சுட்டுக்கொன்றுவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளிக்கு சென்று அங்கு தான் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். பின்னர் சிறுவனும் தன்னைத்தானே சுட்டுக்கொன்று இறந்துவிட்டார். சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், குறைந்தது 30 பேர் காயமடைந்தனர், அவர்களில் ஒன்பது பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் என மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணைகள் நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சிறுவனின் துப்பாக்கிச் சூட்டை அடுத்து, புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தாய்லாந்து பிரதமர் உறுதியளித்துள்ளார். புதிய சட்டத்தின்படி, பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள் மட்டுமே துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார்.