×

சீன எல்லையில் தற்கொலைப் படை... தலிபான்களின் மாஸ்டர் பிளான்!

 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு பேருதவியாக இருந்தது அவர்களின் கட்டுறுதியான படைகள் தான். அமெரிக்காவின் கீழ் ஆப்கானிஸ்தான் அரசு செயல்பட்ட போதிலும், பலம் வாய்ந்த அமெரிக்க படையை வீழ்த்த கொரில்லா போர் முறையை அவர்கள் கையாண்டார்கள். அதேபோல வலிமையான ஆயுதங்களைக் கையாளக் கூடிய தலிபான்களின் பத்ரி 313 படையும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் குறிப்பாக தற்கொலைப் படை தலிபான்களின் ஸ்பெஷல் படை. தொடர்ச்சியாக விடாமல் போர்க்குணத்தோடு போரிட்டதற்கு இந்தப் படைகளின் வலிமை தான் காரணம்.

இதன்மூலம் அமெரிக்க படைகளை ஓரளவு சிதைத்து இன்று அதிகாரத்தையும் அடைந்துவிட்டார்கள். தற்போது அங்கு இடைக்கால அரசு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரசு தற்போது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் அண்டை நாடுகளான பாகிஸ்தான், தஜிகிஸ்தான், ஈரான், சீனா, துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது. இந்த நாடுகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள தற்கொலைப் படையை நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது தலிபான்களின் அரசு.

அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் படாக்‌ஷான் மாகாணம் தஜிகிஸ்தான், சீனா எல்லைகளில் அமைந்துள்ளது. ஆகவே முதற்கட்டமாக இந்த மாகாணத்தின் எல்லைகளில் தற்கொலைப் படையை நிலைநிறுத்த முடிவுசெய்திருப்பதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு லஷ்கர்-இ-மஞ்சுரி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாகாண ஆளுநர் முல்லா நிசார் அஹமதி, "தற்கொலைப் படையினரால் தான் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை விரட்ட முடிந்தது.

இவர்கள் அச்சமின்றி குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் ஆடைகளை அணிந்து பயமின்றி ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க பாதுகாப்பு தளங்களைச் சுக்கு நூறாக்கினார்கள். அதனால் தான் தலிபான்களின் வெற்றிக்கு இவர்கள் முக்கியப் பங்குவகிக்கின்றனர். அடிப்படையில் இவர்கள் பயமறியாதவர்கள். அல்லாவுக்காக தங்கள் உயிரை அர்ப்பணிப்பவர்கள்” என்றார். அண்மையில் தஜிகிஸ்தானுக்கும் தலிபான்களுக்கும் வார்த்தைப் போர் முற்றி வருகிறது. இதன் விளைவாகவே முதற்கட்டமாக அந்நாட்டின் எல்லையில் தற்கொலைப் படையை நிலைநிறுத்தியுள்ளார்கள்.