"பயங்கரவாதத்திற்கு சிவப்பு கம்பளம்" - தப்லீக் ஜமாத் அமைப்புக்கு தடை விதித்த சவுதி!
சுதந்திர இந்தியாவிற்கு முன் உருவான தப்லீக் ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்புக்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது. இது அந்த அமைப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1926ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் மேவத் என்ற பகுதியில் சூஃபி முஹம்மது இல்யாஸ் அல்-கந்தலாவி என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் நோக்கம் இஸ்லாமிய மக்களை இஸ்லாமிய முறைப்படி வாழ வேண்டும் என போதிப்பது. தப்லீக் ஜமாத் என்றாலே, மத நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் குழு என்றே பொருள்.
மதத்தை மட்டுமே அவர்கள் போதிப்பதாகவும், அரசியல் விவகாரங்களில் தாங்கள் தலையிடுவதில்லை என முற்றிலும் மறுக்கின்றனர். ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பயங்கரவாதத்துக்கு இந்த அமைப்பு துணைபுரிவதாக சந்தேகம் கொண்டுள்ளன. இதனால் இந்த அமைப்பை அமெரிக்கா 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆனால் அந்த அமைப்பின் தலைவர்கள் திட்டவட்டமாக மறுக்கின்றனர். தங்களுக்கும் பயங்கரவாததுக்கும் தொடர்பில்லை என்கிறார்கள்.
இதுதொடர்பாக அமெரிக்கா நடத்திய ஆய்வில், நேரடி தொடர்பில்லை என்ற போதிலும், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் தப்லீக் அமைப்பைச் சேர்ந்தவர்களை இழுக்கின்றன என தெரியவந்துள்ளது. இந்த அமைப்பில் உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா, இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக வசிக்கின்றனர். இச்சூழலில் இந்த அமைப்புக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.
இந்த அமைப்பு பயங்கரவாதத்தை அனுமதிக்கு வாயில்களில் ஒன்று எனக் கூறியுள்ள அரசு சமூகத்துக்கு ஆபத்தானது எனவும் எச்சரித்துள்ளது. மசூதிகளின் போதகர்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தும் மசூதிகள் தப்லீக் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அந்நாட்டு இஸ்லாமிய விவகார துறை அமைச்சர் அப்துல் லத்தீப் அல் அல்ஷேக் உத்தரவிட்டுள்ளார். சமூகத்திற்கு அவர்களால் ஏற்படும் ஆபத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.