×

மீண்டும் கொரோனா கோரதாண்டவம்... முழு ஊரடங்குக்கு தயராகும் ரஷ்யா!

 

கொரோனாவின் பிறப்பிடமான சீனா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாளொன்றுக்கு 40 ஆயிரம் என்ற அளவில் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவுக்காக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனர். 

கடந்த சில வாரங்களாவே கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 88 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தக் கொரோனா பரவலுக்கு புதிதாக உருமாற்றமடைந்த டெல்டா கொரோனா காரணம் எனக் கூறப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாமல் இருப்பதும் கூடுதல் காரணம். ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் இந்த சுணக்கம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அக்டோபர் மாத இறுதியில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளித்து அதிபர் புடின் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் கொரோனா பரவல் குறையவே இல்லை. எனவே கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.